மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 4 ஏப் 2020

தங்கம் கடத்தல்: 41 பேர் பணியிட மாற்றம்!

தங்கம் கடத்தல்: 41 பேர் பணியிட மாற்றம்!

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்பான சிபிஐ சோதனையின் எதிரொலியாக, அங்கு பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் உட்பட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த 41 ஊழியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் தினமும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, துபாய் உள்பட பல்வேறு நாடுகளிலிருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அதிகளவில் தங்கம் கடத்தப்படுவதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மாதம் 5ஆம் தேதியன்று சிபிஐ அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற விசாரணையில், 19 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சுங்கத் துறை உதவி ஆணையர் வெங்கடேசலு, சுங்கத் துறை கண்காணிப்பாளர்கள் கழுகாசல மூர்த்தி, ராமகிருஷ்ணன், சுங்கத் துறை ஆய்வாளர்கள் அனீஸ் பாத்திமா, பிரஷாந்த் கவுதம், பிரீடி கவுதம் என சுங்கத் துறை அதிகாரிகள் ஆறு பேரும், தங்கம் கடத்துவோர் 13 பேரும் அடங்குவர். இவர்களிடமிருந்து 2 கிலோ தங்கம் மற்றும் 9 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 19 பேரிடமும், தொடர்ந்து மூன்று நாட்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அடிப்படையில், அவர்கள் மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான திருச்சி விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் ஆறு பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிபிஐ சோதனை எதிரொலியாக, திருச்சி விமான நிலையத்தில் பணியாற்றிய சுங்கத் துறை அதிகாரிகள் உள்பட அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த ஊழியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி சுங்கத் துறை ஆய்வாளர்கள் 39 பேர், விமான சரக்கு முனையம் (கார்கோ) பிரிவு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 41 பேர் அதிரடியாக இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான உத்தரவை திருச்சி சுங்கத் துறை இணை ஆணையர் முகமது நவ்பால் வெளியிட்டுள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டோர் அந்தந்த இடங்களில் இன்று (செப்டம்பர் 12) பணியில் சேருமாறு வாய்மொழியாக உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய சுங்கத் துறை வான்நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளர்களாக நிர்மலா ஜோயல், அனுஜ்குமார், ரஜித்குமார், ஹேமந்த் யாதவ், யதுவேந்தர்சிங் ஆகிய ஐந்து பேரும், கார்கோ பிரிவில் நரேந்திரகுமார், ரவிகேஷ்குமார் கேசன் ஆகியோரும் புதிதாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon