மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 28 அக் 2020

கேரளா: 41 லட்சம் ஊழியர்களைப் பாதித்த வெள்ளம்!

கேரளா: 41 லட்சம் ஊழியர்களைப் பாதித்த வெள்ளம்!

கேரளாவில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 41.3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கேர் ரேட்டிங்ஸ் ஆய்வு கூறியுள்ளது.

இதுகுறித்து கேர் ரேட்டிங்ஸ் ஆய்வில், ‘கேரள வெள்ளத்தால் 41.3 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலையிழப்பால் ரூ.4,000 கோடி ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் மொத்த உள்மாநில உற்பத்தியில் 1 விழுக்காடு சரிந்துள்ளது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்துக்கு கடும் நிதிப் பற்றாக்குறையையும் இந்த வெள்ளம் ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 14 மாவட்டங்கள் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இடுக்கி, எர்ணாகுளம், கொல்லம், கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய ஐந்து மாவட்டங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாநிலங்களில் 1.09 கோடி பேர் வாழ்கின்றனர். இது அம்மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 30 விழுக்காடாகும். அதுமட்டுமின்றி வீட்டுத் தொழில்கள் மற்றும் வேளாண் தொழில்களில் ஈடுபட்டுள்ள கேரள மக்களில் 19 விழுக்காட்டினர் இந்த மாநிலங்களில்தான் உள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டு தொழிலாளர் அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இவர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆகும். ஊதியம் மட்டுமின்றி சொத்து, வாகனம் ஆகியவற்றையும் இவர்கள் இழந்துள்ளனர். ரப்பர் துறை ரூ.420-430 கோடி இழப்பையும், தேயிலை துறை ரூ.35-40 கோடி இழப்பையும் சந்தித்துள்ளது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிற பகுதிகளின் சாலைகளை புனரமைக்க மட்டும் ரூ.10,000-12,000 கோடி தேவைப்படும் என்றும் கேர் ரேட்டிங்ஸ் மதிப்பிட்டுள்ளது.

வெள்ள காலத்தில் இருந்த மோசமான காலநிலையால் விமானப் போக்குவரத்து 15 நாட்கள் வரை தடைபட்டது. அந்த வகையில் ரூ.22-27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon