மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் விபத்து!

திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் விபத்து!

மேற்கு வங்கத்தின் பிர்பாம் பகுதியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 10) காலை 10.30 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டு கட்டடம் சரிந்தது. கட்டடத்தின் முக்கால்வாசி பகுதி வெடி விபத்தினால் தகர்க்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்தினால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வெடி விபத்து நடந்த சமயத்தில் அலுவலகம் பூட்டியிருந்ததாகக் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், இந்த விபத்து குறித்து அரசியல் கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளும், சச்சரவுகளும் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் அம்மாநில பாரதிய ஜனதா கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டுள்ளனர். திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த அனுபிரதா மொண்டால் கூறுகையில், “ஜார்கண்டில் இருந்து கூலிப்படையினரை அழைத்துவந்து வெடிகுண்டு வீசியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றும் வகையில் மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியதாவது, “திரிணமூல் காங்கிரஸ் அலுவலகத்தில் அடுக்கிவைக்கப்பட்ட கையெறி குண்டுகள் வெடித்ததில் இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

போலீஸார் இந்தச் சம்பவத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், இவ்விரு கட்சியினரும் அரசியல் ஆதாயங்களுக்காக ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொள்வது அரசியல் நாகரிகமற்ற செயல் என்று வடமாநில அரசியல் வட்டாரங்கள் நொந்துகொண்டுள்ளன.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon