மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 21 செப் 2019

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு: 2 ஆண்டுகள் சிறை!

எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு: 2 ஆண்டுகள் சிறை!

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு பார்ப்போருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையளிக்கும் எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக அறிவித்துள்ளது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்.

உலகில் பல்வேறு நோய்கள் இருந்தாலும், மனிதர்களைத் தாக்கும் கொடிய நோய்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது எய்ட்ஸ். ஹெச்ஐவி ‌என்ற ‌கிரு‌மியே எய்ட்ஸ் நோய்க்குக் காரணம். இது பற்றிய பயமே, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டக் காரணமாகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில், எய்ட்ஸ் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் புதிதாக இயற்றப்பட்டுள்ளது.

எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை தர மறுப்பதும், பாதிக்கப்பட்டோரை நிறுவனங்களில் பணியில் இருந்து நீக்குவதும் குற்றம் என்று கடந்த ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சட்டம், கடந்த ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி வேலை, சிகிச்சை என எந்தவிதத்திலும் எய்ட்ஸ் நோயாளிகளிடம் பாகுபாடு காட்டப்படுவது குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பால்வினை நோய் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவருக்கும், அவர்களை உதாசீனப்படுத்துவோருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது. எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, இந்தச் சட்டம் ஒருவரின் உரிமையாகக் கருதப்படுவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon