மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

சிஆர்பிஎஃப்: தற்கொலையைத் தடுக்க திட்டம்!

சிஆர்பிஎஃப்: தற்கொலையைத் தடுக்க திட்டம்!

சிஆர்பிஎஃப் வீரர்களின் மன அழுத்தம், தற்கொலையைத் தடுக்க சிறப்புப் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தில் போரினால் இறப்பவர்களைக் காட்டிலும் மன அழுத்தம், தற்கொலை காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. நாட்டின் துணை ராணுவமான சிஆர்பிஎஃப் இதைத் தடுப்பதற்கு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஆர்பிஎஃப் இயக்குநர் ஜெனரல் ஆர்.ஆர்.பட்னாகர் கூறுகையில், சிஆர்பிஎஃப் வீரர்களின் எண்ணிக்கை 3 லட்சம் வரை இருப்பதாகத் தெரிவித்தார். “ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராகவும், மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும், சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்கொலை செய்துகொண்டவர்களின் வயது வரம்பானது, நாட்டில் தற்கொலை செய்துகொள்ளும் சராசரி வயதினரோடு ஒப்பிடுகையில் ஒத்துப்போகிறது. இதற்குக் காரணம், மன அழுத்தம். அதனால், மன அழுத்தத்துக்கான காரணங்களை அறிந்துகொள்ளச் சில பரிசோதனைகளும், கேள்விகளும் வீரர்களிடம் கேட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மன அழுத்த சோதனைத் திட்டத்தின் ஓர் அங்கமாக இது மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டுக்காகச் சிறப்பான பணியை மேற்கொள்ளும் இந்த வீரர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும் வகையில், எய்ம்ஸ் மற்றும் டாடா சமூக அறிவியல் மையத்துடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தக் குழுவானது வீரர்களுக்கு ஆலோசனை வழங்கும். குறிப்பாக, ஒருவர் விடுமுறைக்கு வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்தவுடனே, மற்ற வீரர்கள் அவரிடம் பேசி, ஏதும் பிரச்சினை இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும்பாலான தற்கொலைச் சம்பவங்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டு வந்த பிறகுதான் நடக்கிறது. ஒரு வீரருக்கு மற்ற வீரர்கள் தான் பொறுப்பு. வீரர்களிடம் ஏதாவது பிரச்சினை இருக்கும்போது, அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகள் தரப்படும்” என்று கூறினார் பட்னாகர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon