மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: வாசிப்பு குறித்த சென்டிமென்ட்!

சிறப்புக் கட்டுரை: வாசிப்பு குறித்த சென்டிமென்ட்!

ஆர்.அபிலாஷ்

“தினமும் சில பக்கங்களாவது படிக்க வேண்டும்; வாரம் ஒரு நாவலாவது படிக்க வேண்டுமென நினைப்பேன். ஆனால், நடக்காது. ஏதாவது ஒரு வேலைப் பளு வந்து என்னை திசை திருப்பிவிடும்” என்றெல்லாம் சிலர் அங்கலாய்ப்பதைக் கேட்டிருக்கிறேன். புத்தக வாசிப்பை ஏதோ தெய்வத்துக்கு பூஜை செய்வதைப் போலச் செய்பவர்களைக் கண்டிருக்கிறேன். தாம் வாசிக்கும்போது யாராவது குறுக்கிட்டால் குரல்வளையைப் பிடித்தது போலக் கத்திக் கூப்பாடு போடும் சில நண்பர்கள் எனக்கு உண்டு. பத்துப் பக்கங்கள் படித்துவிட்டு அதையே சிலாகித்துப் பத்து நாட்கள் பேசுகிறவர்களைத் தெரியும். எனக்கு இத்தகைய சென்டிமென்டுகள் எல்லாம் கிடையாது.

சில நாட்கள் நான் வாசிப்பதில்லை. அந்தச் சில நாட்கள் வாரங்களாக நீள்வதும் உண்டு. திடீரென ஓய்வாய் சோம்பலாய் வாசித்தபடியே இருப்பேன். வாசிப்பு அதன் இயல்புபடி நிகழ வேண்டும் என எண்ணுவேன்.

கும்பிடத் தேவையில்லை

வாசிப்பினால் எதையும் குறிப்பாய் பெற முடியாது. ஆனால், உணர்வுகளைத் தீவிரப்படுத்தவோ, சிந்தனையைக் கூர்மையாக்கவோ அது உதவலாம் என நம்புகிறேன். வாசிப்பு மனதுக்கு நாம் செய்யும் ஓர் உடற்பயிற்சி. யாரும் ஜிம்முக்குப் போய் டம்பெல்ஸைக் கும்பிட்டுச் சில சொட்டுகள் கண்ணீர் விடுவதில்லை.

தண்ணீர் மொண்டு குடிக்க கோப்பை உதவுகிறது; வாசிக்கப் புத்தகம் பயன்படுகிறது. ஆனால், கோப்பையினால் தண்ணீர் வருவதில்லை; கோப்பைத் தண்ணீரும் அல்ல. அதே போன்றே புத்தகம் வழியாய் அறிவும் நுண்ணுணர்வும் சிந்தனைப் பயிற்சியும் கிடைக்கலாம் (கிடைக்காமலும் போகலாம்). ஆனால், அதற்காக அந்த அறிவையும் இன்ன பிறவற்றையும் தந்தது அந்தப் புத்தகம் அல்ல. அதனால்தான் நான் புத்தகங்களை வணங்குவதோ, போற்றிப் பாதுகாப்பதோ இல்லை.

ஒரு புத்தகத்தை ஒரு கோப்பையோடு ஒப்பிட்டேன். நீங்கள் மொண்டு குடிப்பது கழிவுநீரை என்றால் உங்கள் உடல்நலனை அது கெடுக்கும். ஆக, எல்லா வாசிப்பும் நல்ல வாசிப்பல்ல.

வாசிப்பு எப்போது கேடாக முடிகிறது? எப்போது நம்மை மேம்படுத்துகிறது?

அடிமையாக்கும் தன்மை

முகநூலில் நாம் என்ன செய்கிறோம்? நிறைய நிறைய வாசிக்கிறோம்; விவாதிக்கிறோம். கேலி, கிண்டல், விளையாட்டு என பொழுதைக் கழிக்கிறோம். அங்கு நிகழ்வது வாசிப்பும் எழுத்துமே. ஆனால், டிவியைவிட அது அதிக போதையானது, நேரத்தை உறிஞ்சுவது, நம்மை பேதலிக்க வைப்பது என நினைத்து அவ்வப்போது கணக்கை டீ-ஆக்டிவேட் செய்துவிட்டு வெளியேறுகிறோம். ஆனால், யாரும் டிவியைக் கண்டு அஞ்சி அதைப் போட்டு உடைப்பதில்லை. ஆனால், மொபைலில் ஃபேஸ்புக்கைப் பலமுறை அன்-இன்ஸ்டால் பண்ணிவிட்டு விரல் பதறக் காத்திருப்பவர்களை எனக்குத் தெரியும். ஏன் வாசிப்பும் எழுத்தும் நமக்கு இன்னல் தருகின்றன?

ஏனென்றால் மிதமிஞ்சிய கேளிக்கையாக வாசிப்பும் எழுத்தும் மாற முடியும் என ஃபேஸ்புக் காட்டுகிறது. இரண்டும் சூதாட்டத்துக்கு நிகராக நம்மை அடிமையாக்க முடியும்.

எல்லா ஃபேஸ்புக் பதிவுகளையும் இந்த வகையில் சேர்க்க முடியாது. நான் பல நல்ல குறுங்கட்டுரைகளை, குறுங்கதைகளை, கவிதைகளைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் படிக்கிறேன். ஆனால், எப்போதும் நல்ல எழுத்து ஒரு சின்ன வட்டத்துடன் நின்று போகிறது.

இது ஃபேஸ்புக்கின் சிக்கல் மட்டுமல்ல. பத்திரிகை, வார இதழ்கள், இலக்கிய நடுநிலை இதழ்கள், சில தீவிர சிறு பத்திரிகைகள்கூட இந்த வகையில் சேரும். அதாவது, தமிழில் வெளியாகும் வார, மாத இதழ்கள் எவையும் நமக்குச் சவால் அளிப்பதில்லை.

வாசிப்பு தரும் சவால்கள்

சவாலை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் - அ) உணர்வுரீதியான சவால், ஆ) புத்திக்கான சவால்.

நம் உணர்வுகள் முன்னுக்குப் பின் முரணானவை. நல்ல எழுத்து இந்தச் சிக்கலான உணர்வு நிலையைப் படம்பிடிக்கும். உதாரணமாக, லெவ் தல்ஸ்தோய் எழுதிய ‘அன்னா கரனீனா’ நாவலில் அன்னா தன் கணவனையும் குழந்தையையும் உதறிக் காதலனுடன் ஓடிப் போகிறாள். அந்த அளவு அவள் காதல் உக்கிரமானது, உண்மையானது. அவளது காதல் வாழ்வு மிகவும் கொந்தளிப்பாகவும் ஆழமான சுகம் அளிப்பதாகவும் உள்ளது. ஒருநாள் உணவகம் ஒன்றில் அன்னாவும் அவளது காதலனும் ஜாலியாக அன்பாய் பேசிக்கொண்டிருப்பதைக் காணும் ஒருவர் தன் நண்பரிடம் இவ்வாறு கூறுகிறார்: “இந்த உறவு நீண்ட நாள் நீடிக்காது. இவர்கள் விரைவில் பெரும் துயரத்தைத் தழுவுவார்கள்.”

உடனே நண்பர் அது எப்படி, இருவரும்தான் அந்நியோன்யமாய் இருக்கிறார்களே எனக் கேட்கிறார். உடனே இவர் சொல்கிறார், “மிதமிஞ்சிய மகிழ்ச்சியை மனித மனத்தால் தாங்க முடியாது. அது தன்னை அறியாது குற்றவுணர்வு கொள்ளும், உடனே வேதனையையும் சுய அழிவையும் கோரும். மிதமான மகிழ்ச்சியே நீடிக்கும்.”

அவ்வாறே நிகழ்கிறது. குற்றவுணர்வும் மகனைப் பிரிந்த வேதனையையும் அன்னாவை வாட்டுகின்றன. அந்தத் தாம்பத்திய மகிழ்ச்சிக்குத் தான் உகந்தவள் அல்ல என அவளுக்குத் தோன்றுகிறது. அவள் பதறுகிறாள்; தவிக்கிறாள்; அவளால் தன் காதலனை விடவோ, தன் குழந்தையை அடையவோ முடியாது. ஒருகட்டத்தில் அவளது எரிச்சலான நடவடிக்கைகள் தாங்காமல் அவளது காதலனும் அவளிடம் கோபிக்கிறான். அவள் சட்டென முடிவெடுத்து ரயிலுக்குத் தலை கொடுத்து உயிர் விடுகிறாள்.

அன்னா ஏன் அப்படி செய்தாள் எனும் கேள்விக்கு எளிதாய் விடை சொல்லலாம். ஆனால், அந்த விடை திருப்தி அளிக்காது. அது ஒரு மர்மமாகவே நீடிக்கிறது. ஏனெனில் அன்னாவின் மனம் முரண்பட்ட உணர்வுகள் நிரம்பியது. அன்னாவைப் பற்றி எழுதும் தல்ஸ்தோயும் அவ்வளவு முரண்பாடுகளையும் தன் எழுத்தில் கொண்டு வருகிறார். இந்த நாவல் நிச்சயம் உணர்வுரீதியாய் நமக்குச் சவாலானது. நம்மைத் திடுக்கிடவும் குழப்பவும் கண்ணீர் விடவும் செய்வது. நாம் பார்க்கும் மனிதர்களையும் இந்த அளவு சிடுக்குகளுடன் புரிந்துகொள்ளத் தூண்டுவது. ஆகையால், அது நல்ல வாசிப்பு.

புத்திக்குச் சவால் அளிப்பவை எவை என்பது உங்களது புத்திசாலித்தனம், சிந்தனைத் திறன், மற்றும் ஜீரண சக்தியைப் பொறுத்தது.

நமக்குப் புரிகிற ஆனால் முழுக்கப் புரியாத, தெரியாத ஒன்றை ஒரு புத்தகம் சொல்லும்போதே நாம் ஒருவித மனத்திளைப்பை அடைகிறோம். இது உடலுறவு உச்சத்துக்கு இணையானது. எனக்குத் தத்துவ நூல்கள் அப்படி அபாரமான திகைப்பை, திகிலை, பல குழப்பங்களை அளிக்கின்றன. ஒவ்வொரு பத்தியைப் படித்து முடிக்கையிலும் என் புத்திசாலித்தனமும், சிந்தனை ஆழமும் கூடிவிட்டதாய் உணர்கிறேன்.

அண்மையில் TheWire.in இதழில் Remembering B.P. Mandal எனும் கட்டுரையை படித்தேன். அது என்னைச் சவாலுக்கு இழுக்கவோ, ஆச்சரியப்படுத்தவோ இல்லை. பல தலைவர்களுக்கு எழுதப்படும் அஞ்சலிக் கட்டுரைகளும் அப்படியே தாம். ஆனால் இதே மண்டல் கட்டுரையையே ராஜ் கௌதமன் எழுதினால் நம்மைத் திகைக்கச் செய்வார்; புதிய பார்வையில் யோசிக்கத் தூண்டுவார்.

புதிய சவால்களை நோக்கி…

நல்ல வாசிப்பை நான் இப்படிப் புரிந்துகொள்கிறேன். எழுதப்பட்ட விஷயம் சமூக அளவில் முக்கியமா, அதனால் சமூகத்துக்கு உய்வுண்டா என்பதெல்லாம் முக்கியமில்லை. ஜிம்மில் நாம் பத்து கிலோ வெயிட்டை தினமும் தூக்குகிறோம் என்றால் ஒருநாள் கூடுதலாய் இரண்டரை கிலோ சேர்த்து பன்னிரண்டரையாகத் தூக்கிப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், தினமும் பத்து கிலோவையே தூக்கினால், உடற்பயிற்சி வீண். நமது நாள், வார, மாத இதழ்களும் முகநூலும் ஏன் ஒருவித போதை நிலையிலேயே நம்மை வைத்துக் கெடுக்கின்றன என்றால் அது இப்படித்தான் நடக்கிறது. அவை நம்மைச் சற்றும் சோதிப்பதோ, சிரமப்படுத்துவதோ இல்லை.

நமக்குப் பரிச்சயமில்லாத துறைகள் சார்ந்த நூல்களும் அவ்வாறே நல்ல வாசிப்புக்கு உதவும். உதாரணமாக, புகைப்படக் கலையின் தொழில்நுட்பங்களைப் பற்றின ஒரு கட்டுரை பாஜகவின் இந்துத்துவ அரசியல் பற்றின வழக்கமான ஒப்பாரிக் கட்டுரையைவிட நமக்கு மனக் கிளர்ச்சியை, அறிவு வளர்ச்சியை அளிக்கும். அதாவது, நீங்கள் அரசியல் குறித்துத் தொடர்ந்து வாசிப்பவர் என்றால் அதை நிறுத்திவிட்டுப் புதிய துறைகளில் படியுங்கள். தினமும் விழிப்பிலும் உறக்கத்திலும் அரசியலே படித்து அரசியலே பேசினால் அது மூளையை மழுங்கடித்து உங்களையும் முரடு தட்டிப் போகச் செய்யும்.

நான் என் பல்கலையில் வாய்ப்புக் கிடைத்தால் சமூகவியல் வகுப்புகளுக்குப் போய் அமர்வேன். ஓர் இலக்கிய வகுப்பை விட எனக்குப் பல மடங்கு ஆர்வமூட்டுபவை இந்த வகுப்புகள்.

ஆக, தினமும் வாசிப்பதோ, ஒரு நூலைப் படித்து முடிப்பதோ முக்கியமல்ல. வாசிப்பு அது ஒருவித சோம்பலான பழக்கமாக மாறி அது உங்களை அழித்திடலாம். எந்த நூலைக் கையில் எடுத்தாலும் அது கீழ்வரும் தகுதிகளைக் கொண்டிருக்கிறதா எனப் பார்த்துக்கொள்ளுங்கள்:

1) அது உங்களை ஆச்சரியப்படுத்துகிறதா?

2) உங்கள் வழக்கமான ரசனையை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறதா?

3) அது உங்களுக்குக் கொஞ்சம் புரிவதாயும் கொஞ்சம் புரியாததாகவும் உள்ளதா?

4) அது உங்கள் கருத்தியலை, நம்பிக்கைகளை அசைப்பதாய், கேள்விக்குட்படுத்துவதாய் உள்ளதா?

5) அது உங்களை முரண்பட்ட உணர்வுச் சுழலுக்குள் தள்ளுகிறதா?

6) அது யோசித்து, விவாதித்து, புரிந்துகொள்ளும்படியாய் உள்ளதா?

இக்கேள்விகளுக்கு ஆம் எனும் பதில் கிடைத்தால் நீங்கள் சரியான நூல்களைப் படிக்கிறீர்கள் எனப் பொருள். இல்லை எனில் நீங்கள் டீ-ஆக்டிவேட் செய்ய வேளை நெருங்கிவிட்டது எனப் பொருள்!

(கட்டுரையாளர் அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள:[email protected]

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon