மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

ஊழல் புகார்: வேலுமணியுடன் விவாதிக்கத் தயார்!

ஊழல் புகார்: வேலுமணியுடன் விவாதிக்கத் தயார்!

ஊழல் புகார்கள் குறித்து அமைச்சர் வேலுமணியுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சவால் விடுத்துள்ளார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்தப் பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், வேலுமணி மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, தன் மீதான ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் நிரூபித்துவிட்டால், அரசியலிலிருந்தே விலகிவிடுகிறேன் என்றும், அப்படி ஒருவேளை நிரூபிக்காவிட்டால், ஸ்டாலின் அவரது எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவியைத் துறந்து, அழகிரிக்கோ அல்லது குடும்பத்தைச் சார்ந்த வேறொருவருக்கோ பதவியைத் தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “வேலுமணி பொறுப்பற்ற முறையில் பதிலளித்திருக்கிறார். முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல அவர் பத்திரிகையாளர்களிடம் பேசியிருக்கிறார். வேலுமணி துறையில் ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையின் பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரியும். வேலுமணி மீது குற்றமில்லை என்றால் பத்திரிகையாளர்களை எதற்காக மிரட்ட வேண்டும். திமுகவின் புகார்கள் ஏனோதானோ புகார்களாக இருக்காது, ஆதாரத்துடன்தான் புகார் அளிப்போம். இதுதான் கடந்த கால வரலாறு” என்று தெரிவித்தார்.

“தான் செய்த ஊழலை மறைப்பதற்கு வேலுமணி ஏதேதோ காரணங்களைக் கூறுகிறார். நான் அவரை சவாலுக்கு அழைக்கிறேன். வேலுமணி மீது சுமத்தப்பட்டுள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் எங்கு வரச் சொல்கிறாரோ, அந்த இடத்தில் ஆதாரங்களோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன்” என்றும் சவால் விடுத்தார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon