மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு?

ட்ரம்ப் - கிம் மீண்டும் சந்திப்பு?

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து வடகொரிய அதிபர் கிம் கடிதம் எழுதியுள்ளார்.

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா பல முறை அணு ஆயுத சோதனை நடத்தியது. இதனால் அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளாகி பொருளாதாரத் தடைகளை சந்தித்தது. இந்த நிலையில், எதிரெதிர் துருவங்கள் என்று கூறப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இடையேயான சந்திப்பு கடந்த ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் அரங்கேறியது. இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

உலக வரலாற்றில் முக்கிய நிகழ்வு என்று இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்ப் புகழ்ந்திருந்தார்.

இதற்கிடையே, அணு ஆயுதங்களை அழிப்பதாக அறிவித்த கிம் அந்தப் பணிகளில் மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. வடகொரியாவுக்குச் செல்லவிருந்த அமெரிக்க செயலாளரின் பயணமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், ட்ரம்பை மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த கிம் விருப்பம் தெரிவித்து தற்போது கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், “மிகவும் சாதகமான, இதமான கடிதத்தை கிம் எழுதியுள்ளார். இரு நாட்டுத் தலைவர்களும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்பதே இந்தக் கடிதத்தில் இடம்பெற்றிருந்த விஷயம். இந்தச் சந்திப்புக்கான ஒருங்கிணைக்கும் வேலைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

எனினும் கிம் எழுதியுள்ள கடிதத்தின் நகலை வெள்ளை மாளிகை, பத்திரிகையாளர்களுக்கு வழங்கவில்லை.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon