மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஏமாற்றிய அரசுக்குப் பாடம் கற்பித்த பொதுமக்கள்!

தமிழக மக்கள் தங்களுக்கான தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்துகொள்ளும் நிகழ்ச்சிகள் தற்போது அதிகமாகி வருகின்றன. அரசு என்ற அமைப்பு தங்களின் அடிப்படைக் கோரிக்கைகளை மதிக்காதபோது, மக்கள் அரசை மதிக்காமல் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள்.

பெரம்பலூர் மாவட்டத்தின் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஒதியம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள குடிநீர் வரத்து வாய்க்காலை 2 கிலோமீட்டர் தூரத்துக்கு கிராம மக்களே தங்கள் சொந்த செலவில் புதிதாகக் கட்டமைத்து ஆச்சரியப்படுத்தியுள்ளனர். ஏற்கெனவே இருக்கும் நீர்நிலைகள், நீர்வழிச் சாலைகளைச் சீரமைப்பதே மிகப் பெரிய சவாலாக இருந்துவரும் நிலையில், புதிதாக ஒரு கால்வாயைக் கட்டமைத்தது ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

5000 குடும்பங்களை உள்ளடக்கிய ஒதியம், சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கான நீர்நிலைகள் யாவும் பயன்பாட்டில் இல்லை. இப்பகுதியில் உள்ள கிணறுகள் குடிநீர் எடுக்கத் தகுதியற்ற நிலையில் உள்ளன. குளம் குட்டைகள் யாவும் வறண்டிருந்தன. இருக்கும் ஒரே நீராதாரமான சுத்து குளத்தில் உள்ள நீரும் மாசடைந்திருந்தது. எனினும், அக்குளத்தில் இருக்கும் நீரையே வடிகட்டிப் பயன்படுத்தி வந்தனர் அம்மக்கள். வறட்சியின் காரணமாகச் சுத்து குளத்துக்கு நீர் வரும் வாய்க்கால் புதர்கள் சூழ்ந்து பயனற்றுப் போய்விட்டது.

மழை காலம் தொடங்கியிருப்பதால், சுத்து குளத்துக்குப் புதிதாக வாய்க்கால் அமைத்துத் தரக் கோரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கை குறித்த எந்தப் பதிலும் வராத நிலையில், கடந்த மே மாதம் நடந்த கிராமசபைக் கூட்டத்தில் நீர்வரத்து வாய்க்கால் சீரமைத்ததாகத் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இது கிராம மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தாங்கள் ஏமாற்றப்பட்டதைத் தெரிந்துகொண்ட மக்கள், கோபப்படாமல் களத்தில் இறங்கினர்.

கிராம மக்களிடமே பொதுநிதி வசூல் செய்து சுத்து குளத்துக்குப் புதிதாக வரத்து வாய்க்கால் அமைக்க முடிவு செய்து மூன்று லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். அதன் மூலம் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு சுத்து குளத்துக்கான குடிநீர் வரத்து வாய்க்காலைக் கட்டமைத்தனர். தற்போது 6 அடி அகலம் 4 அடி முதல் 8 அடி வரை ஆழம் கொண்டு புது மழைக்குப் புத்துணர்ச்சியுடன் காத்திருக்கிறது சுத்து குளத்து மக்கள் வாய்க்கால்.

அரசாங்கத்தையே நம்பி ஏமாந்து சுணங்கிப்போகாமல், சரியான செயல்களைச் சரியான நேரத்தில் சுயமாகச் செய்துகாட்டிய இந்த மக்களை வாழ்த்துவோம். பாராட்டுவோம். நம் பகுதியில் இதுபோன்ற நிலை இருந்தால் அதை இவர்களைப் போலவே நாமும் தீர்த்துக் காட்டுவோம்!

- நரேஷ்

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon