மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலி!

அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலி!

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் நேற்று (செப்டம்பர் 11) சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை முன்பு நேற்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஏராளமான அரசு மருத்துவர்கள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், பதவி உயர்வு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மருத்துவர்களுக்கு மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான அரசாணை, 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. இந்த ஆணையை அமல்படுத்தி, ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்பது தமிழக அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

"தமிழக அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளில் பணி செய்வதாலும், சொந்தமாக கிளினிக் நடத்துவதாலும், மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது" என்று கூறி, கடந்த ஆண்டு ஏழாவது சம்பள ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த அமைக்கப்பட்ட குழு மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் கேட்டு அரசு மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon