மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

இந்தியாவின் மிக மோசமான பேருந்து விபத்து!

இந்தியாவின் மிக மோசமான பேருந்து விபத்து!

தெலங்கானா மாநிலம் கொண்டகட்டுவில் நேற்று நிகழ்ந்த பேருந்து விபத்து, இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்தாகக் கருதப்படுகிறது. இந்த விபத்தில் 55 பேர் பலியாகியுள்ளனர்.

தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் கொண்டகட்டுவில் இருந்து ஜக்தியாலுக்கு நேற்று (செப்டம்பர் 11) அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்து ஒன்று புறப்பட்டது. சனிவரம்பேட் கிராமத்தைக் கடந்தபோது, இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்தில் மோதுவதைத் தவிர்ப்பதற்காக, பேருந்தைத் திருப்பியபோது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் உருண்டது. இதில் 55 பேர் பலியாகினர். இவர்களில் 29 பேர் பெண்கள். இது தவிர, 32 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் மிக மோசமான அளவில் காயப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளத்தாக்குப் பகுதியில் 30 அடி ஆழத்தில் பேருந்து உருண்டு விழுந்ததாலும், ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாலும் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், இந்தப் பேருந்தில் 88 பேர் வரை பயணித்துள்ளனர். இவர்களில் பலர், கொண்டகட்டு ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து திரும்பிய பக்தர்கள் ஆவர். இந்தப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஸ்ரீனிவாஸ், கடந்த சுதந்திர தினத்தின் போது தனது பணிகளுக்காக மாநில அரசின் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரங்கல்

இந்த விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர். வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அதிர்ச்சியை இந்த விபத்து ஏற்படுத்தியுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளார். தெலங்கானா பேருந்து விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவிப்பதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இழப்பீடு அறிவிப்பு

விபத்து நடந்த இடத்துக்கு, நேற்று உடனடியாக விரைந்தனர் ஜக்தியால் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள். தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவும் உடனடியாகக் கொண்டகட்டுவுக்குச் சென்றார். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் இழப்பீட்டுத் தொகையாக அறிவித்துள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்.

தெலங்கானா கொண்டகட்டு விபத்து, இந்திய வரலாற்றில் மிக மோசமான பேருந்து விபத்தாகப் பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்த பேருந்து விபத்தில் 51 பேர் பலியாகினர். இதற்கு முன்னர் தெலங்கானாவின் மகபூப்நகர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானபோது, 45 பேர் பலியாகினர்.

கொண்டகட்டு பேருந்து விபத்து குறித்த விவரங்களை அறிய, 8004254247 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு ஜக்தியால் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon