மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 19 செப் 2020

உங்கள் மனசு: மறைக்கும் காதலில் பிறக்கும் குற்றவுணர்வு!

உங்கள் மனசு: மறைக்கும் காதலில் பிறக்கும் குற்றவுணர்வு!

டாக்டர் சுனில்குமார், டாக்டர் ஜெயசுதா காமராஜ்

மனதை ஆராய்ந்து, வாழ்வை அலசும் சிறப்புத் தொடர்

காதலும் திருமணமும் நமது சமூக வாழ்க்கையின் முக்கியமான அங்கங்களாக விளங்குகின்றன. ஆனால், காதலித்துத் திருமணம் செய்வதை இந்தச் சமூகம் முற்றிலுமாக ஏற்றுக்கொள்வதில்லை. சாதி, மத, இன, மொழி, வர்க்க வேறுபாடுகளால் பல காதல்கள் திருமண எல்லையைத் தொடுவதில்லை. இதனை மீறித் திருமணம் செய்துகொண்டவர்களில், மிகச் சில தம்பதிகளே தொடக்கத்திலிருந்த காதல் உணர்வை இறுதி வரை தாங்கி நிற்கின்றனர்.

திருமணத்துக்குப் பிறகு, தம்பதியர் இடையிலான காதல் முறிவதற்குப் பல காரணங்கள் உண்டு. நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும், ஆரம்ப காலத்தில் தம்பதிகளிடையே இருந்த பிணைப்பு பின்னாட்களில் மெதுவாக மங்கிப்போகிறது. பிறன் மனை நோக்குதலே, கணவன் மனைவி இடையே பிரிவு ஏற்படுவதற்கும், ஒருவர் மீது மற்றவர் வெறுப்பு கொள்வதற்கும் முக்கியக் காரணமாக விளங்குகிறது. துணையின் மீது ஏற்படும் ஏமாற்றம், சலிப்பு ஆகியவையும் மண உறவுக்கு வெளியே வேறொரு துணையை நாடக் காரணமாகின்றன.

குடும்ப வாழ்க்கையில் சந்தீப்பை முழுதாக ஏமாற்றிவந்ததாகவே உத்ரா எண்ணினார். இந்தக் குற்றவுணர்ச்சியானது, அவரது தூக்கத்தைப் பறித்துக்கொண்டது. அந்த நேரத்தில்தான், சந்தீப் தனது பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். வீட்டில் இருக்கும் நாட்களில், தினமும் உத்ராவோடு உறவு கொள்வது சந்தீப்பின் வழக்கம். இம்முறை, அது செல்லுபடியாகவில்லை. கணவன் எவ்வளவு நெருங்கி வந்தபோதும், மனைவி சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லை. இதனை உத்ராவின் உடல்ரீதியான கோளாறாகவே நினைத்தார் சந்தீப்.

விலகிச் செல்லும் உடல்

கடுமையான மன உளைச்சலில் இருந்ததால், உத்ராவின் மனதில் உடலுறவுக்கான தூண்டுதலே நிகழவில்லை என்பதே உண்மை. உணர்வுகள் ஒன்றுபட்டுக் கணவருடன் நெருக்கமாக இருக்க முடியாமல்போவதை அவர் உணர்ந்தார். வெளிநாட்டுத் துறைமுகங்களுக்குச் செல்லும்போதெல்லாம், அங்குள்ள பாலியல் தொழிலாளர்களோடு உறவு கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர் சந்தீப்பின் சக ஊழியர்கள். ஆனால், அவரோ அதனை அறவே வெறுத்தார். ஆறு மாதங்கள் காமக்கனலில் காய்ந்தாலும், உத்ராவிடம் மட்டுமே உறவு நிலையைப் பேணுவது என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.

செல்போனில் தொடர்புகொள்ளும்போது, பலமுறை இதனை உத்ராவிடமே தெரிவித்திருக்கிறார் சந்தீப். இந்த நினைவுகள், உத்ராவின் மனதில் எரிச்சலையும் குற்றவுணர்வையும் அதிகப்படுத்தின. அப்போது சரணுடனான தனது உறவை நினைத்து அருவருப்படைந்தார். இதற்குத் தண்டனையாக, தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்தார். அவ்வாறு முயற்சி செய்தபோதுதான், உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டார். சந்தீப்பினால் இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. தங்களது குடும்ப வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் இல்லையென்றே, அப்போதும் அவர் நம்பினார். ஆனால், மருத்துவர்கள் எவ்வளவு வற்புறுத்திக் கேட்டபோதும், தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை உத்ரா கூறவேயில்லை.

வீடு திரும்பிய பிறகும், தனது தற்கொலை முயற்சிகளைத் தொடர்ந்தார் உத்ரா. அப்போதும்கூட, உடலுறவுக்கு ஒத்துழைக்க முடியாததை மட்டுமே அவரது குறையாக நினைத்தார் சந்தீப். நிலைமை மோசமடைவதைத் தடுக்கவே, உத்ராவுக்கு மனநல ஆலோசனை வழங்கும் யோசனையைச் செயல்படுத்த விரும்பினார். அதன் பிறகே, அவர் மைண்ட் ஸோன் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

தனிமை தந்த வெறுமை

திருமணமான புதிதில், சந்தீப் இல்லாத தருணங்களில் பெரிதாகத் தனிமையை உணரவில்லை உத்ரா. கணவர் கப்பலில் வேலை செய்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் பெரிதாகக் கவலைப்படவில்லை. ஆனால், அவர் இல்லாத பொழுதுகள் தனிமையின் கொடுமையை உத்ராவின் மனதில் மேலும் அதிகமாக்கின. “தொடர்ந்து பல நாட்கள், அவரால் போனில் பேசக்கூட முடியாது. அந்த அளவுக்கு, அலைவரிசை சிக்கலில் கப்பல் சிக்கிக்கொள்ளும். இது தொடர்கதையானபோது, நான் மன அழுத்தத்துக்கு ஆளானேன்.

சிறு வயதிலிருந்தே, காதலில் திளைக்கும் வாழ்க்கை வேண்டுமென்று விரும்பினேன். வாழ்வை ரொமாண்டிசைஸ் பண்ணுவது எனக்குப் பிடிக்கும். ஒவ்வொரு நொடியும் என் மீது காதலைப் பாய்ச்ச வேண்டுமென்று விரும்பினேன். யதார்த்தத்தில் அதற்கு நேர்மாறான வாழ்க்கையே வாய்த்தது. எந்நேரமும் கொஞ்சும் கணவர் வேண்டுமென்று விரும்பியதற்கு எதிராக, ஆறு மாதத்துக்கு ஒருமுறை என்னைப் பார்க்க வந்தார் சந்தீப்.

இந்த நேரத்தில்தான் எனது வாழ்க்கையில் ஒரு போதைப்பொருளாக வந்தார் சரண். அவர் எனது அழகை ஆராதித்தார். நான் முக்கியம் என்ற நினைப்பை, எனக்குள் அவர் உருவாக்கினார். அவர் வருவார் என்பதற்காகவே, காலையிலேயே எழுந்து என்னை அழகாக அலங்கரித்துக்கொள்வேன். ஆனால், அவர் மாலையில்தான் வருவார். அந்தக் காத்திருப்பே எனக்குச் சுகம் தந்தது” என்பது உத்ராவின் பதில்களில் மிக முக்கியமானது.

திருமண உறவுகளைத் தாண்டித்தான் இருவருமே இந்த பந்தத்தில் இணைந்தனர். ஆனால், மனைவியையும் உத்ராவையும் இணைகோடுகளாகக் கருதும் வல்லமை சரணிடம் இருந்தது. ஆனால், உத்ராவினால் அப்படி நினைக்க முடியவில்லை.

சீர்குலைக்கும் எண்ணங்கள்

இதனாலேயே, தனது மனவருத்தத்தைச் சரணும் அனுபவிக்க வேண்டுமென்று நினைத்தார் உத்ரா. இருவருக்குமான இன்பத்தைப் போலவே, துன்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமென்று நினைத்தார். சரண் உடனான உறவை, அவரது மனைவியிடம் தெரிவிக்கவும் முயன்றிருக்கிறார். ஆனால், அது நடந்தேறவில்லை. சிகிச்சையின்போதும், சரண் வாழ்வை எப்படியாவது சீர்குலைக்க வேண்டுமென்ற எண்ணம் அவர் மனதில் அதிகமிருந்தது. சரணை மையமாகக் கொண்டே, உத்ராவின் மனம் இயங்கியதைக் கண்டறிய முடிந்தது.

இதனைச் சரிசெய்தால்தான் உத்ராவின் பிரச்சினைகள் சீராகும் என்று புரிந்தது. ஆரம்ப கட்டத்தில், அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டதாகச் சொல்லப்பட்டது. கணவர் வெளிநாடு சென்றதால், உத்ரா வேறொருவரை நாடியதில் தவறேதுமில்லை என்று கூறப்பட்டது. இதன் மூலமாக, தற்கொலை எண்ணத்திலிருந்து அவரது மனம் விடுபட்டது. ஆனால், தான் மட்டுமே வாழ்வில் அவதியுறுவதாகக் எண்ணினார் உத்ரா. இருவருக்கும் இடையிலான உறவினால், சரண் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லையே என்ற அவரது எண்ணத்தைக் கைவிட முடியவில்லை.

இந்த உண்மைகள் எதுவும் தனது கணவருக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று விரும்பினார் உத்ரா. அவரது நேர்மைக்குச் செய்யும் துரோகமாகவே இதனைக் கருதினார். இந்த உண்மையினால், சந்தீப் நிலைகுலைந்துபோவதை அவர் விரும்பவில்லை.

அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் திறன்

அதே நேரத்தில், சரண் இல்லையென்று நினைத்தாலே, வாழ்வின் மீதான அர்த்தத்தை இழந்துவிடுவதாக உணர்ந்தார் உத்ரா. தொடர்ச்சியான ஆலோசனைகள் மூலமாக, சந்தீப்புக்குத் தெரியாமல் சரணுடனான வாழ்வைத் தொடர நினைப்பது முட்டாள்தனம் என்று அவருக்கு உணர வைக்கப்பட்டது. உணர்வுகளின் உச்சத்தில் முடிவெடுக்கும் திறனைக் கைவிட்டு, அறிவுபூர்வமாகச் சிந்திக்கும் எண்ணம் உத்ராவிடம் வளர்த்தெடுக்கப்பட்டது.

உடனடியாகப் புதிய உறவுகளை உண்டாக்குவதும், அதனைத் திடீரென்று முறித்துக்கொள்வதும் இதுபோன்ற சூழலில் இருப்பவர்களிடம் வழக்கமானது. இதுபோன்ற உறவுகளை முறிப்பதென்பது, இவர்களது வாழ்வில் கடுமையான காயங்களை ஏற்படுத்தும். சில நேரங்களில், ஒன்றுக்கும் மேற்பட்ட ரகசியக் காதல்களை வளர்த்தெடுத்து, அதனால் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வழிவகுக்கும்.

அப்படியொரு நிலைக்கு ஆளானதை ஒருகட்டத்தில் உத்ரா உணர்ந்தார். தான் பக்குவமற்ற நிலையில் அந்தச் சூழலை எதிர்கொண்டதைப் புரிந்துகொண்டார். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அபிராமிக்கள் தோல்வியுறும் இடமும் இதுதான்.

தன்னை மட்டுமே மையமாக வைத்து, இணையதளத்தில் வீடியோக்களைப் பதிவேற்றி, அவற்றுக்கான மக்கள் ஆதரவை கண்டு பூரிப்பவர்களில் பலரும் உத்ராவைப் போன்றவர்கள்தான். யதார்த்த வாழ்க்கையில் இருக்கும் வெறுமையைப் போக்க, தங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்லது அப்படிப்பட்ட முக்கியத்துவத்தைக் கொடுப்பதாகக் காட்டிக்கொள்பவர்களுக்காக, இவர்கள் எதுவும் செய்யத் தயாராக இருப்பார்கள். அதனைப் பெற, உடலுறவுக்குத் தயாராகவும் இவர்களுக்குத் தயக்கம் இருக்காது. இதன் பின்விளைவுகள் மட்டுமே, கடந்த காலத்தில் செய்த தவறுகளைப் புரியவைக்கும்.

இதுபோன்ற மனநலச் சிக்கல்களைத் தவிர்க்க, மண உறவை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும். யாரோ சிலர், திருமணத்துக்கு வெளியிலான காதலினால் சுகமுறுவதைக் கண்டு நம் வாழ்வைச் சிதைத்துக்கொள்வதில் அர்த்தமில்லை. நமது மனச்சுமைகளைப் போலவே, அவர்களது மனச்சுமைகளும் ரகசியமானது என்ற சிந்தனையை மனதில் ஏற்றிக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட காதலில் திளைக்க விரும்புவதாக உணர்ந்தால், அதற்குத் தக்க மனநல ஆலோசனைகளைப் பெறுவது கட்டாயம். இல்லையென்றால், அது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிடும்.

காதல் எத்தனை முறை வருமென்று எவருக்கும் தெரியாது. அதற்காக, முறை தவறிய காதலில் இறங்கினால், அந்தக் காதலே மரியாதையற்றதாகிவிடும். ஏனென்றால், மறைக்கப்படும் காதல்கள் எப்போதும் குற்றவுணர்ச்சியை மட்டுமே மீதம் வைக்கும்!

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

எழுத்தாக்கம்: உதய் பாடகலிங்கம்

கட்டுரையாளர்கள்:

டாக்டர் சுனில்குமார், மருத்துவ உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் நிறுவனர். மணிபால் கஸ்தூரிபா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உளவியல் பயின்றவர். மது போதை பற்றி ஆய்வுப் பட்டம் பெற்றவர். குழந்தைகள் மனநல மருத்துவராக, 2002 – 2009ஆம் ஆண்டுகளில் புதுச்சேரி அரசுப் பொது மருத்துவமனையில் பணியாற்றியவர். இவர், மனநல சிகிச்சை குறித்து தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஆய்வேடுகளைச் சமர்ப்பித்திருக்கிறார். சமகாலச் சமூகம் எத்தகைய மனநல பாதிப்புகளை எதிர்கொண்டுவருகிறது என்பதற்கான இவரது தீர்வுத் தேடல் தொடர்கிறது.

டாக்டர் ஜெயசுதா காமராஜ், உளவியல் நிபுணர்

மைண்ட் ஸோன் மருத்துவமனையின் இணை நிறுவனர். சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் உளவியல் பிரிவில் எம்.பில். பட்டம் பெற்றவர். மது போதை குறித்து ஆய்வுப் பட்டம் பெற்றிருக்கிறார். தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கருத்தரங்குகளில் ஆய்வேடுகள் சமர்ப்பித்திருக்கிறார். குடும்ப நல ஆலோசனை, போதை மீட்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் பெற்றோர் திறம் போன்ற விஷயங்களைக் கையாளுவதில் வல்லுநர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon