மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 டிச 2019

ஸ்டெர்லைட்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணம் அல்ல என்ற மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், இரண்டு வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து மத்திய நீர்வளத் துறையின் கீழ் செயல்படும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், தூத்துக்குடியில் நிலத்தடி நீர்மாசு அடைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டும் காரணமல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவான இந்த அறிக்கைக்குத் தடை விதிக்கக் கோரி, தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 11) நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுக்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், தூத்துக்குடியில் நிலத்தடி நீரை ஆய்வு செய்து இந்த அறிக்கையை நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கெனவே முழு அளவில் ஆய்வு நடத்தி, நிலத்தடி நீர் மாசடைந்ததற்கு ஸ்டெர்லைட் நிறுவனம்தான் காரணம் என்பதாலேயே அந்த ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

மேலும், ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் இந்த அறிக்கையால் தூத்துக்குடியில் மீண்டும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon