மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 6 ஆக 2020

டிஜிட்டல் திண்ணை: அட்டாக் ஸ்டாலின்... அலர்ட் எடப்பாடி

டிஜிட்டல் திண்ணை: அட்டாக் ஸ்டாலின்... அலர்ட் எடப்பாடி

மொபைல் டேட்டா ஆனில் இருக்க.. தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸுக்குப் போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

“அதிரடியை ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும் ஆளும் அதிமுக அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்காமலேயே இருக்கிறார் ஸ்டாலின் என அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தது. கலைஞர் மறைவுக்குப் பிறகு அதுவும், திமுக தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அதிமுகவை எதிர்ப்பதில் அதிரடி காட்ட ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக அதிமுக ஆட்சியில் நடக்கும் ஊழல்களையும் முறைகேடுகளையும் எதிர்த்து அனல் பறக்கும் அறிக்கைகள் வர ஆரம்பித்துவிட்டது.

’வரலாறு காணாத மெகா ஊழலில் ஈடுபடிட்ருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை நியாயமாக நடைபெற உடனடியாக அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறையை கொள்ளையாட்சித் துறையாக உருக்குலைத்திருக்கிறார் வேலுமணி. ஊழலில் மணியான கதாநாயகனாக மாறி கஜானாவை தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலமாகக் கொள்ளையடித்திருக்கிறார்’ எனக் காட்டமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்.

இந்த அறிக்கை வந்ததுமே அமைச்சர் வேலுமணியைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘ ஸ்டாலின் அரசியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. இனியும் நாம அமைதியாக இருக்கக் கூடாது. ஸ்டாலினுக்கு உடனடியாக நீங்கதான் பதில் சொல்லணும். மீடியாவை கூப்பிட்டு அவருக்கு உடனே பதிலடி கொடுங்க. நாம ஏதோ ஊழல் கட்சி என்பது போன்ற தோற்றத்தை மக்களிடம் உருவாக்கிடுவாரு. அதுக்கான முயற்சியில்தான் அவர் இறங்கியிருக்காரு...’ என்று சொன்னாராம். அந்த நேரத்தில் அமைச்சர் வேலுமணி டெல்லியில் இருந்தார். அங்கிருந்தபடியே மீடியாவுக்கு பேசச் சொன்னாராம் முதல்வர்.

முதல்வர் சொன்னபடியே டெல்லியில் மீடியாக்களிடம் பேசிய வேலுமணி, ‘ உலக பணக்காரர்கள் வரிசையில் ஸ்டாலின் குடும்பம் 10ஆவது இடத்தில் இருக்கிறது. கலைஞர் டிவிக்கு பணம் எப்படி வந்தது என கேட்டால் உங்க கிட்ட பதில் இல்லை. இதுல என்னை பதவி விலகச் சொல்றாரு ஸ்டாலின். தமிழக அரசைக் கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படி பேசிவருகிறார் ஸ்டாலின். ஸ்டாலின் அவரோட தலைவர் பதவியிலிருந்தும், எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகி அதை துரைமுருகன்கிட்டயோ, அல்லது அழகிரிக்கோ கொடுக்க சொல்லுங்க. அவரு இதுக்கு ரெடின்னா நான் பதவி விலக ரெடி. என் மேல சும்மா குற்றச்சாட்டை சொல்லிட்டு இருக்காரு. அதை நிரூபிச்சுட்டா பதவி என்ன... நான் அரசியலை விட்டே விலகிடுறேன்’ என்று சவாலாகவே விட்டார்.

அடுத்த அறிக்கை ஸ்டாலினிடம் இருந்து நேற்று வந்தது. அதில், வெளிச்சம் தரும் மின் பகிர்மானக் கழகத்தை இருட்டுக்குள் தள்ளியிருக்கும் அமைச்சர் தங்கமணி தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாகக் கைவிட வேண்டும். தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்றுள்ள ஊழல்கள், முறைகேடுகள் காரணமாகவே தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கள் அமலுக்கு வந்திருக்கின்றன. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும், தற்போதைய அமைச்சர் தங்கமணியும் மக்களுக்கு மன்னிக்க முடியாத மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். டெண்டர்கள் மூலம் தாராளமாகக் கொள்ளையடித்திருக்கிறார்கள்’ என்று ஸ்டாலின் வெளுத்து வாங்கியிருந்தார்.

இன்று காலை இது தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் முதல்வர் எடப்பாடி பேசியிருக்கிறார். ‘ரெண்டு நாளைக்கு முன்பு வேலுமணியை ஊழல் அமைச்சர்னு ஸ்டாலின் பேசினாரு. அதுக்கு வேலுமணி சவால் விட்டதும் சத்தமில்லாமல் அமைதியாக இருக்காரு. இப்போ உங்களை விமர்சனம் செய்து அறிக்கை வந்திருக்கிறது. இனி தினமும் இதுபோல அறிக்கை வரும். இது நான் எதிர்பார்த்ததுதான். எல்லாத்துக்கும் நாம பதில் கொடுப்போம். அப்போதான் நம்ம மேல தப்பு இல்லை என்பது மக்களுக்கு தெரியும். ஒருகட்டத்துல ஸ்டாலின் அறிக்கை வந்தாலே அது ஏதோ சொல்லணும்னு சொல்லிட்டு இருக்காரு என்பது மக்களுக்கு புரிஞ்சுடும். அதுவரைக்கும் நாம பதில் கொடுப்போம். இன்று நீங்களே அவருக்கு பதில் சொல்லிடுங்க...’ என்று சொன்னாராம்.

உடனடியாக இன்று பிற்பகலில் மீடியாவை சந்தித்தார் தங்கமணி. “ஒரு எளியவரின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதைத் தாங்க முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறுகிறார். மத்திய மின் தொகுப்பிலிருந்து 3000 மெகாவாட் மின்சாரம் குறைந்துவிட்டது. காற்றாலை மின் உற்பத்தியும் திடீரெனக் குறைந்துவிட்டது. இதனால்தான் சில பகுதிகளில் அரை மணிநேரம் மின் வெட்டு இருக்கிறது. எந்தப் பகுதியில் எந்த நேரத்தில் மின்வெட்டு இருக்கிறது என்பதை அந்தப் பகுதி மக்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தியிருக்கிறோம். மின்வெட்டு என்ற வார்த்தையைக் கண்டுபிடித்ததே திமுகதான். தன்னால் முதல்வர் ஆக முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஸ்டாலின் இப்படியெல்லாம் பேசிவருகிறார்...’ என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார் தங்கமணி.

இது மட்டுமல்ல... மற்ற அமைச்சர்களிடமும், ‘ஸ்டாலின் எந்த நேரத்தில் யாரைப் பற்றி விமர்சனம் செய்வாரு என்பது தெரியாது. ஆனால், இனி அறிக்கை வந்துட்டுதான் இருக்கும். நீங்க உங்க துறையில் இருக்கும் சிக்கல் பற்றியெல்லாம் தெளிவாகத் தெரிஞ்சு வச்சுக்கோங்க. அவர் எப்போ பேசினாலும் அதுக்கு பதில் கொடுக்கும் அளவுக்கு உங்ககிட்ட ஆவணங்கள் இருக்கணும்...’ என்று சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி” என்று முடிந்தது ஸ்டேட்டஸ்.

அதற்கு லைக் போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

புதன், 12 செப் 2018

அடுத்ததுchevronRight icon