மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

முதல்வர் மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் நிலை என்ன?

முதல்வர் மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் நிலை என்ன?

முதல்வருக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகாரில் தினம் தோறும் நடத்தப்பட்ட விசாரணையின் விவரங்களை லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஒப்பந்தத்தில் 4800 கோடி ரூபாய் அளவிற்கான டெண்டர்களைத் தன்னுடைய உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் ஒதுக்கி முறைகேடு செய்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு இன்று (செப்டம்பர் 12) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, நெடுஞ்சாலைத் திட்டத்தில் உலக வங்கியின் விதிகளை மீறி முதல்வரின் உறவினருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணையை தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது 4 முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி உலக வங்கி நிதி ஒதுக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்தால் அதை உலக வங்கி அமைப்பே கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமே எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வாதம் வைத்த அரசு தலைமை வழக்கறிஞர், திமுக நெடுஞ்சாலைத் துறைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர் நடைமுறைகளைத் தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும். உலக வங்கி நிதி.உதவியுடன் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஒப்பந்தம் எடுப்பவர்கள் தான் முதலில் பணத்தை செலவு செய்ய வேண்டும். அதன் பின் அந்த பணத்தை உலக வங்கி 6 மாதங்களுக்குப் பிறகு ஒப்பந்த நிறுவனத்திற்கு வழங்கும். இது சாலை அமைக்கும் பணிக்கு மட்டுமல்லாமல் பராமரிப்புக்கும் சேர்த்து தான் தொகை ஒதுக்கப்படுகிறது. இதை திமுக முறைகேடு எனக் கூறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

1991இலிருந்து எஸ்பிகே நிறுவனம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சியிலும் அவர்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் மகன் என்பதால் அரசு ஒப்பந்தம் பெற தகுதியில்லையா என அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் கேள்வி எழுப்பினார். மேலும், ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி அதிகரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

முதல்வர் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதா என லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த அரசின் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரங்களை வெளிப்படையாகக் கூற முடியாது என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.

மக்களுக்காக பொது சேவையில் இருக்கும் அதிகாரிகள் குற்றச்சாட்டுகள் தெரிவித்தால் அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி தான் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியுள்ளது ஆரம்ப கட்ட விசாரணையில் குற்றம் இருப்பது உறுதியானால்தான் எப்ஐஆர் பதிவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

இதன் பின் உறவினர்களுக்கு அரசு ஒப்பந்தங்கள் வழங்கிய குற்றச்சாட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் என்ன, ஒப்பந்த ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்த விசாரணையின் நிலை என்ன? என கேள்வி எழுப்பிய நீதிபதி, லஞ்ச ஒழிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணையின் தினம்தோறும் நடந்த விசாரணை விவரங்களை விரிவான பதில் மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon