மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

இ-சிகரெட் தடை: அரசாணை வெளியீடு!

இ-சிகரெட் தடை: அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் இ-சிகரெட் விற்பனைக்குத் தடை விதித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் இ-சிகரெட் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 12) அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

இ-சிகரெட் என்பது நிகோடின் ஆவியை வெளிப்படுத்தும் ஒன்று. நிகோடின் மாத்திரையை கொதிநிலைக்கு உட்படுத்தும்போது அதில் இருந்து நிகோடின் ஆவி வெளியாகிறது, இந்த ஆவியை இழுக்கும்போது புகைப்பிடிப்பது போன்றே இருக்கும். இந்த இ-சிகரெட்டினால் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால், இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இ-சிகரெட்டில் உள்ள ரசாயன மூலக்கூறுகள் புற்றுநோயை ஏற்படுத்தும் எனவும், நுரையீரல் பிரச்சினையை உண்டாக்கும் எனவும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் சிசுவுக்குக் கேடு விளைவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 68,000க்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்பாடு குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ அல்லது அதைவிட அதிகப் பாதிப்புகளை ஏற்படுத்தும் இ-சிகரெட்டுகள் மற்றும் அது போன்ற சிகரெட்டுகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிப்பதாக இந்த அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon