மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

காலா: நீதிபதிகள் பார்க்க வேண்டிய திரைப்படம்!

காலா: நீதிபதிகள் பார்க்க வேண்டிய திரைப்படம்!

காலா படத்தை நீதிபதிகள் பார்க்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு திரைப்படத்தினால் சமூகத்தில் மாற்றங்கள் நிகழுமா என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பாதிப்பினை ஒரு சில திரைப்படங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த அளவிற்குத் திரைப்படம் சக்தி வாய்ந்த ஊடகமாகத் திகழ்ந்து வருகிறது. இருப்பினும் அந்த ஊடகம் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறதா என்பதும் விவாதமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது. ‘நிலமே எங்கள் உரிமை’ என்ற அடிப்படை கருத்தியலை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தை, நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைத்து நீதிபதிகளும் பார்க்க ஏற்பாடு செய்யவேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நூதன மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தாம்பரம் தாலுகா பழைய பெருங்களத்தூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் 24 குடும்பங்கள் 10 வருடங்களாக வசித்து வருகிறோம். மின்இணைப்பு, ரேசன்கார்டு, வாக்காளர் அட்டை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டு அங்கு வசித்து வந்தவர்களை அப்புறப்படுத்திவிட்டு குடிசைமாற்று வாரியம் இடத்தைக் கையகப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மாற்று இடம் கேட்டு பலமுறை அரசிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனையடுத்து இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எட்டுபேருக்கு மட்டுமே மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே நிலம் இல்லாதவர்களின் கஷ்டங்கள் குறித்து நடிகர் ரஜினி நடித்த காலா படத்தில் சொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நிலம் எங்கள் உரிமை என்ற கருத்து காலா படத்தில் வலியுறுத்தப்படுவதால் நிலம் இல்லாதவர்களின் கஷ்டங்களை நீதித்துறை புரிந்துகொள்ள மத்திய பிரதமர் அலுவலகமும் சட்ட அமைச்சகமும் இணைந்து நாட்டில் உள்ள மாஜிஸ்திரேட்கள் முதல் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வரை அனைவரும் காலா படத்தைப் பார்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனுவை, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தகுதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon