மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

பெட்ரோல் விலை: நீதிமன்றம் தலையிட மறுப்பு!

பெட்ரோல் விலை:  நீதிமன்றம் தலையிட மறுப்பு!

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இது அரசின் பொருளாதார கொள்கைகள் சார்ந்தது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. அவற்றின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனினும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பது தங்கள் கையில் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பூஜா மகாஜன் என்பவர் இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை இஷ்டம் போல் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை 22 நாள்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளே காரணம் என்று மத்திய அரசு தவறான தகவலைப் பரப்பி வருகிறது.

எனவே, முறையான விலையை நிர்ணயம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ராஜேந்திர மேனன் மற்றும் வி.கே. ராவ் முன்பு இன்று(செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது. அப்போது, “இந்த விவகாரம் அரசின் பொருளாதார கொள்கைகள் தொடர்பானது. மிகப்பெரிய பொருளாதார சிக்கல்கள் உள்ளன. எனவே, நீதிமன்றம் இதிலிருந்து விலகியே இருக்கும். அரசு நடவடிக்கை எடுக்கட்டும். இது தொடர்பாக அரசுக்கு எந்த வழிகாட்டுதலும் வழங்க முடியாது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்த விவகாரத்தில் நான்கு வாரங்களுக்குள் தனது நிலையை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நவம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon