மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 29 நவ 2020

சரக்குப் போக்குவரத்தில் இறங்கும் ஸ்பைஸ்ஜெட்!

சரக்குப் போக்குவரத்தில் இறங்கும் ஸ்பைஸ்ஜெட்!

சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகளில் களமிறங்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்துத் துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இத்துறையில் நிலவும் கடுமையான போட்டி, குறைவான கட்டணங்கள், விமான எரிபொருளின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மோசமான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. ஏர் இந்தியா நிறுவனம் கடும் நிதியிழப்புகளைச் சந்தித்து வருவதால் மத்திய அரசே இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக ஜூன் காலாண்டிலும் இழப்புகளைச் சந்தித்துள்ளது. அந்நிறுவனம் தனது செலவுகளைக் குறைத்து நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஏற்கெனவே இறங்கிவிட்டது. வெற்றிகரமாக இயங்கிவந்த இண்டிகோ நிறுவனத்தின் வருவாயில் இழப்பு ஏற்படவில்லை என்றாலும், லாபத்தில் 97 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகையால், அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்களுமே நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

இந்த நிலையில், சரக்குப் போக்குவரத்துக்கென்று பிரத்யேகமான விமான சேவைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இச்சேவைகளுக்கு ‘ஸ்பைஸ்எக்ஸ்பிரஸ்’ (SpiceXpress) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தச் சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகள் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதியன்று டெல்லியில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தில் முதல் ‘போயிங் 737’ சரக்குப் போக்குவரத்து விமானம் அமர்த்தப்பட்டது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சரக்கு விமானப் போக்குவரத்து சேவைகள் டெல்லி, பெங்களூரு, கவுகாத்தி, ஹாங்காங், காபூல், அமிர்தசரஸ் ஆகிய இடங்களை இணைக்கவுள்ளன. நடப்பு நிதியாண்டுக்குள் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தனது பணியில் நான்கு சரக்குப் போக்குவரத்து விமானங்களை அமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon