மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

‘பர்த் டே’க்கு வெளியான ஸ்பெஷல் வீடியோ!

‘பர்த் டே’க்கு வெளியான ஸ்பெஷல் வீடியோ!

நடிகை ஸ்ரேயா நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி, அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் 2003ஆம் ஆண்டு வெளியான ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படம் மூலம் அறிமுகமானார். ஜெயம்ரவியுடன் நடித்த ‘மழை’, தனுஷுடன் நடித்த ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படங்கள் அவரை பிரபலப்படுத்தின. இதைத்தொடர்ந்து ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் ஜோடி சேர்ந்தார். இந்தப் படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது.

அப்போது ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் படத்தின் நாயகி ஸ்ரேயாவும் பரபரப்பாகப் பேசப்பட்டார். அவருடைய வசீகரிக்கும் அழகும், அசத்தலான நடன அசைவுகளும் ரசிகர்களைக் கட்டி போட்டன. தமிழ் சினிமாவில் அடுத்த சிம்ரன், ஸ்ரேயாதான் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள்.

இதனால் விஜய்யுடன் அழகிய தமிழ்மகன், விஷாலுடன் தோரணை, விக்ரமுடன் கந்தசாமி, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், குட்டி, உத்தமபுத்திரன், ஆர்யாவுடன் சிக்குபுக்கு, ஜீவாவுடன் ரௌத்திரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்தும் 2011க்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் இருந்து விலக வேண்டிய சூழல் அவருக்கு ஏற்பட்டது.

இந்தச் சூழலில் மூன்று வருடங்களுக்கு முன்பு கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட ‘சந்திரா’ படத்தின் கிளாமரான புகைப்படங்கள் மீண்டும் ஸ்ரேயாவைப் பற்றிப் பேசவைத்தன. ஆனால் அந்தப் படம் தமிழில் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

அதனையடுத்து சிம்புவுடன் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி அதுவும் தோல்விப் படமாக அமைந்தது. இருப்பினும் தனது விடா முயற்சியால் ஸ்ரேயா அடுத்து இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நரகாசூரன்’ திரைப்படம் வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று ஸ்ரேயாவின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது அவர் தெலுங்கில் நடித்து வரும் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரேயா புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் முதல் பார்வை பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஸ்ரேயாவின் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வெளியாகியுள்ள இந்த வீடியோவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon