மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 9 ஆக 2020

சென்ட்ரலுக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

சென்ட்ரலுக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரை சூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 12) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “ மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதியாக, எழுத்தாளராக, பேச்சாளராக, இலக்கியவாதியாக, திராவிட தலைவராக விளங்கியவர் பேரறிஞர் அண்ணா. பெரும்பாலான திராவிடக் கட்சிகளுக்குக் கருத்தியல் நீரூற்றாக இருப்பவர் அண்ணா. சுய மரியாதை திருமணம், இரட்டை மொழிக் கொள்கை போன்றவற்றைக் கொண்டுவந்தவர். நாட்டின் சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். எனவே, அண்ணாவை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்” என்று கோரியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “புரட்சித் தலைவர் என்று அன்போடு அழைக்கப்படும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு நலத் திட்டங்களுக்காக அவர் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் நினைவுகூரப்படுகிறார். பாரத ரத்னா எம்ஜிஆருக்கு புகழ் சேர்க்கும் விதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon