மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ரயில்வே: 100 % மின்மயமாக்கலுக்கு ஒப்புதல்!

ரயில்வே: 100 % மின்மயமாக்கலுக்கு ஒப்புதல்!

இந்திய ரயில் பாதைகளை 100 விழுக்காடு மின்மயமாக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (செப்டம்பர் 12)செய்தியாளர்களிடம் பேசுகையில், ”ரயில்வே தடங்களை மின்மயமாக்குவது என்பது தேசிய போக்குவரத்து துறையினுடைய வருடாந்திர செலவீனங்களை வெகுவாக குறைக்கும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும். இத்திட்டத்துக்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, 13,675 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் கிட்டத்தட்ட ரூ.12,134.50 கோடி செலவில் மின்மயமாக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வே அதிகாரிகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பழைய டீசல் எஞ்சின்களுக்குப் பதிலாக புதிய மின்சார எஞ்சின்களை அனைத்து ரயில்களுக்கும் பொருத்தும் பணியை மேற்கொள்வார்கள். 2021-22ஆம் நிதியாண்டுக்குள் இந்தியாவின் அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாக்கப்படும்” என்றார்.

இந்தியாவை 100 சதவிகிதம் மின்மயமாக்கப்பட்ட தேசமாக மாற்றும் திட்டத்தின்கீழ், இந்த பணிகள் நடைபெறும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பகுதிகளின் இரயில் பாதைகளில் இப்பணிகள் தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழல் காக்கும் திட்டம்

சமீபத்தில், ரயில்வே அமைச்சகம் சார்பில் ரயில்வே மின் பொறியாளர்கள் (IREE) மற்றும் நிதி ஆயோக் இணைந்து இந்திய ரயில்வேயில் மின்-மொபைலிட்டி என்ற மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் பேசிய ரயில்வே துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியதாவது, “ இந்த திட்டத்தின்மூலம் ஓர் ஆண்டிற்கு இந்திய ரயில்வே துறை எரிபொருளுக்காக செய்யும் செலவிலிருந்து ரூ.13,000 கோடி சேமிக்கப்படும். மேலும் இதன்மூலம் ஓர் ஆண்டிற்கு 3.4 பில்லியன் டன் கார்பன் கழிவுகள் வெளியேற்றப்படுவதைத் தவிர்க்க முடியும்.” என்றார்.

அரசுத் தரவுகளின்படி, கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 8,400 கிலோமீட்டர் தொலைவிலான ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி சூரிய மின்சக்தி பயன்பாடு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாடு ஆகியவற்றை அதிகளவில் முன்னெடுப்பதன் மூலமும், விரைவில் சுத்தமான மற்றும் மாசற்ற இந்தியாவை உருவாக்கலாம்.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon