மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

கிச்சன் கீர்த்தனா: மோதகக் கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: மோதகக் கொழுக்கட்டை!

விநாயகரை பிடிக்குதோ, இல்லையோ இந்த மோதகக் கொழுக்கட்டையை பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க. ஏன்னா, அதனோட சுவை அப்படி. பிடிச்சு வெச்ச பிள்ளையார் மாதிரி இருக்குற இந்தக் கொழுக்கட்டையைத் தட்டுல எடுத்து வெச்சு பாருங்க. அதை சாப்பிட்டு வீடே உங்களை தூக்கி வெச்சு கொண்டாடும். இப்போ அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருள்கள்

பச்சரிசி மாவு - 1 கப் ( 200 ) கிராம்

கடலைப்பருப்பு - 100 கிராம்

வெல்லம் (பொடித்தது) - 100 கிராம்

தேங்காய்த துருவல் - 100 கிராம்

ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு - கால் டீஸ்பூன்

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

முதலில் கடலைப்பருப்பை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் பருப்பு மற்றும் தண்ணீரை குக்கரில் வைத்து 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.

நீராவி அடங்கியதும் தண்ணீரை நன்கு வடித்துப் பருப்பை சிறிது நேரம் ஆறவிடவும். ஆறியதும் பருப்புடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்து கரகரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடிக்கனமான பாத்திரத்தை வைத்துப் பொடித்த வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய பாகை மீண்டும் அதே பாத்திரத்தில் கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய், பருப்புக்கலவை, ஏலக்காய்த்தூள் சேர்த்து பூரணம் கெட்டியாகும் வரை கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். பூரணம் ரெடி.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து ஒன்றேகால் கப் தண்ணீர், உப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

கொதித்த வெந்நீரை அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டியின் பின்புறத்தால் நன்கு கிளறவும். மாவு கட்டி இல்லாமல் கொஞ்சம் தளர்வாக இருக்க வேண்டும். மேல் மாவு ரெடி.

பெரிய எலுமிச்சை அளவுக்கு மாவை எடுத்துத் தட்டி நடுவில் பூரணத்தை வைத்து மாவை மூடி விட வேண்டும். மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் செய்து வைத்துக் கொள்ளவும்.

இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டைகளை வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். மோதகக் கொழுக்கட்டை ரெடி!

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon