மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

எழுவர் விடுதலை: காங்கிரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

எழுவர் விடுதலை: காங்கிரசுக்கு கி.வீரமணி வேண்டுகோள்!

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதிகள் விடுதலை பற்றி ராஜீவ் காந்தி குடும்பத்தினர்களே மன்னித்தருளிய பிறகு மற்றவர்கள் எதிர் கருத்துக் கூறுவதை தவிர்ப்பதே நல்லது" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி காங்கிரஸ் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் 27 ஆண்டுகளுக்குமேல் இருக்கும் கைதிகளை மாநில அரசே விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு - தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானமான கொள்கை முடிவு - இவற்றிற்குப் பிறகு ஏழுபேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜெவ்லா புதிய குழப்பத்தை அரங்கேற்றினார்.

நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துரதிருஷ்டவசமாக பாஜக தீவிரவாதத்தையும் ஒரு பாகுபாட்டுடைய கண்ணோட்டத்தில் பார்க்கிறது. பிஜேபியும், பிஜேபியின் கூட்டாளியான அதிமுக அரசின் வேலை தீவிரவாதிகளை பிடிப்பதா அல்லது காப்பாற்றுவதா? இது தான் இந்த அரசின் கொள்கையா? தீவிரவாதத்தில் ஈடுபட்டதாக குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களை தற்போது நாம் விடுதலை செய்யப் போகிறோமா?’ என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

ராகுல் காந்தியே மன்னித்துவிட்டதாக தெரிவித்துவிட்ட பிறகு காங்கிரஸில் இருந்து எழும் இத்தகைய குரல்கள் பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“இதில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அதனால் நேரிடையாக பாதிப்புக்குள்ளானவர்களான திருமதி.சோனியா காந்தி, மகன் ராகுல்காந்தி, மகள் பிரியங்கா ஆகியவர்களே அவர்களுக்குக் கருணை காட்டுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். இது அவர்களது பெருந்தன்மை, மன்னிக்கும் மனப்பான்மையின் வெளிப்பாட்டுக்கு, பண்பாட்டிற்கும் எடுத்துக்காட்டு ஆகும்! ஆனால், இதையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில், அவரது காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர்கள் பேசுவது, அறிக்கை விடுவது காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்க்காது.

'ராஜாவை மிஞ்சும் ராஜவிசுவாசம்' எப்போதும், எங்கும் விரும்பத்தக்கதல்ல. மேலும் அத்தலைவர்களுக்கு பொதுவாக மக்கள் மத்தியில் சேரவேண்டிய பெருமையைக் குறைக்கவே செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார் வீரமணி.

மேலும் அவர், “ அடுத்து சட்டப் பிரச்சினைக்கு வருவோம். தமிழக ஆளுநர் இதில் தமிழக அரசின் அமைச்சரவை முடிவை ஏற்பதுதான் சட்டப்படி அவர் தனது கடமையை கண்ணியத்துடன் செய்தார் என்பதற்கான அடையாளம் ஆகும்! இதில் சில ஊடகங்கள், ஏடுகள் தேவையில்லாமல், Trial by Media'' ஊடகங்களின் நீதி விசாரணை அலசல் என்பதும் அதீதமானது; மேலும் ஏற்கத்தக்கதும் அல்ல.

மத்திய அரசு இதனை எதிர்த்து வாதாடிய பிறகும்கூட, உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிசீலித்து முடிவு எடுக்க உரிமை உண்டு என்று தெளிவாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுவிட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

மேலும் 2013 ஆம் ஆண்டுவரை வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பலவும் அப்படி ஒரு முடிவு கருணை அடிப்படையில் எடுக்கப்பட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டால், அதனை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தில் எவரும் வழக்குத் தொடுக்கக்கூடும் என்பதற்குக்கூட முன்வந்த உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் பரந்து விரிந்த அதிகார உரிமை இல்லை.ஓரளவுக்கு உண்டு. ஆளுநர்கள் தன்னிச்சையாக, சரியானபடி ஆய்வு செய்யாமல், கருணை காட்டி விடுதலை செய்யும் நிலை ஏற்பட்டால் மட்டுமே நீதிமன்றங்களை நாட முடியும் என்பது மட்டுமே உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள சட்ட நிலைப்பாடு ஆகும். எனவே, இந்த ஏழு பேர் பிரச்சினையில் அதற்கு வாய்ப்பில்லை; காரணம், அமைச்சரவை இரண்டு முறை விவாதித்த முடிவு பரிந்துரையாகும்” என்று விளக்கியுள்ளார் கி.வீரமணி.

காங்கிரஸ் தொண்டர்களை நோக்கி “ காங்கிரஸ் மற்றும் விடுதலை செய்யக்கூடாது என்று கூறுபவர்கள் உணரவேண்டிய உண்மை - இவர்களது குற்றம் விடுபட்டது என்பது இதன்மூலம் பொருள் ஆகிவிடாது; கருணை அடிப்படையில்தான் விடுதலை என்பதினால், அந்தத் தீர்ப்பு மாறிவிடவில்லை என்பதும் உறுதியாகிறது. மேலும் மனிதாபிமானத்தால் இதன்மூலம் அனைவரும் உயர்வார்களே” என்று சொல்லியுள்ளார் கி.வீரமணி.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon