மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

தமிழக அரசுடன் இணையும் மோடி கேர்!

தமிழக அரசுடன் இணையும் மோடி கேர்!

மத்திய அரசின் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்துடன் (மோடி கேர் திட்டம்), தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஒருங்கிணைப்பதற்கான ஒப்பந்தம் இன்று (செப்டம்பர் 11) கையெழுத்திடப்பட்டது.

இந்தியாவில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். நாட்டில் 50 கோடிப் பேர் பயன்பெறும் வகையில், ஆயுஷ்மான் பாரத் என்ற மோடி கேர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் மூலம், 10 கோடியே 74 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின்படி, குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு பெற முடியும். நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள தனியார் அல்லது பொது மருத்துவமனைகளில் பணம் செலுத்தாமல், இலவசமாகச் சிகிச்சை பெறலாம்.

உயிருக்கு ஆபத்தான 51 நோய்களுக்கு, 1 லட்சம் வரையிலான உயர் மருத்துவச் சிகிச்சைகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற வகை செய்வது தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும்.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. தற்போது, மத்திய அரசின் திட்டத்துடன் இணைந்து செயல்படும்போது, சமூக பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் உள்ள 77 லட்சம் ஏழைக் குடும்பங்களில் உள்ள 2 கோடியே 85 லட்சம் பேருக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான கட்டணமில்லா மருத்துவச் சேவை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon