மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

விஜயபாஸ்கருக்கு பயப்படுகிறார் முதல்வர்: துரைமுருகன்

விஜயபாஸ்கருக்கு பயப்படுகிறார் முதல்வர்: துரைமுருகன்

“குட்கா ஊழல் வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை குற்றவாளி என்று சொல்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயங்குகிறார்” என்று திமுக பொருளாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர்கள் மீது ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து இன்று (செப்டம்பர் 11) துத்துக்குடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த துரைமுருகன், “ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் வழக்கும் தொடர்ந்துள்ளார்” என்றார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றம் தான் சாட்டப்பட்டுள்ளது, அவர் குற்றவாளி இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்த கேள்விக்கு, “விஜயபாஸ்கர், பழனிசாமியின் அமைச்சரவையில் இருக்கின்றவர். அவரைப்பற்றி முதல்வர் எப்படி ஊழல் புகார் கூறுவார். அவர் இவரை குற்றவாளி என்று சொன்னால், இவர் அவரை குற்றவாளி என்று சொல்வார். அதனால் பழனிசாமி அப்படி சொல்லியிருக்கிறார்”என்றார்.

திமுக-பாஜக கூட்டணிக்கு ஏங்கி கொண்டிருப்பதாக தம்பிதுரை கூறியுள்ளாரே“அவர் போன்ற ஆட்களுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு பழக்கம் இல்லை” என்றவர், எழுவர் விடுதலை குறித்தான கேள்விக்கு, “ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றமே கொடுத்திருக்கிறது. மாநில அரசும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருக்கிறது. இதில் என்னுடைய கருத்தும் மற்ற யாருடைய கருத்தும் தேவைப்படாது” என்று பதிலளித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரகாசமான வெற்றியைப் பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon