மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

கவர்னர் விடுதலை செய்ய முடியுமா? - புதிய சட்டச் சிக்கல்!

கவர்னர் விடுதலை செய்ய முடியுமா? - புதிய சட்டச் சிக்கல்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைத்த நிலையில், அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உண்டா என்று சட்ட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக சுதிர் நந்திரஜோக் என்ற மூத்த வழக்கறிஞர் தி இந்து நாளிதழுக்கு நேற்று (செப்டம்பர் 10) பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

கவர்னர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்குக் குடியரசுத் தலைவரும் உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும் மறுஉறுதி அளிக்க வேண்டும்.

இது சிபிஐயின் வழக்கு என்பதால் மாநில அரசுக்கு இதில் அதிகாரம் இல்லை. எனவே, தமிழக அரசு பரிந்துரைத்திருந்தாலும், கவர்னர் எழுவரையும் விடுவிக்க முடிவு எடுத்திருந்தாலும்,அதை மத்திய அரசு மறுஉறுதி செய்ய வேண்டும். இதன் அடிப்படையான விஷயம் என்னவென்றால் அது மறுபடியும் குடியரசுத் தலைவருக்குச் சென்று உறுதி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆர்எஸ்.சோதி, இப்பிரச்சினையில் இவ்வளவு விரைவில் கருத்துக் கூற முடியாது என தெரிவித்தார். ஆனால், கவர்னர் இது போன்ற கருணை அடிப்படையிலான வேண்டுகோள்கள் குறித்து முடிவெடுப்பதற்குத் தனியான அதிகாரங்கள் உண்டு. இருப்பினும், அவர் எந்த அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார் என்பதை அவரே முடிவு செய்வார். அவர் இந்தப் பிரச்சினையில் என்ன முடிவு செய்வார் என்பதை அறியக் காத்திருப்போம் என்றார்.

உச்ச நீதிமன்றம் இது தொடர்பான வழக்கில், தனது செப்டம்பர் 6ஆம் தேதியிட்ட உத்தரவில் சம்பந்தப்பட்ட அதிகாரமுள்ளவர்கள் சுதந்திரமாக அரசியல் சட்டப் பிரிவு 161இன்படி முடிவெடுக்க உரிமை உண்டு என்று கூறியுள்ளது என்பதை இன்னொரு மூத்த வழக்கறிஞர் நித்தேஷ் குப்தா சுட்டிக்காட்டுகிறார். இந்த உத்தரவு வி.சுதாகரன் என்பவர் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புடன் ஒத்துப்போகிறது. தண்டனை பெற்ற குற்றவாளிகளின் வழக்கு பரிசீலிக்கப்படவும் அதனடிப்படையில் முடிவு செய்யப்படவும் உரிமை உண்டு என அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். எந்த முடிவு எடுத்தாலும் அது அரசியல் சட்டப் பிரிவு 161இன்படி, நீதிமன்ற பரிசீலினைக்குட்பட்டுத் திருத்தப்படக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆக, எழுவரின் விடுதலை உண்மையில் மத்திய அரசிடமும் நீதிமன்றத்திடமும்தான் இருக்கிறது என்பதே சட்டத்தின் நிலை.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon