மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

ரூபாய் மதிப்பு: விலை உயரும் பழங்கள்!

ரூபாய் மதிப்பு: விலை உயரும் பழங்கள்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதால் இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ரூபாயின் மதிப்பு ரூ.72.40 ஆகச் சரிந்துள்ளது. இதனுடன் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் சேர்ந்து இந்தியாவின் பல்வேறு பொருட்களின் விலை உயர்வுக்குக் காரணமாகியுள்ளன. குறிப்பாக இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை அதிகரித்துள்ளதால் மும்பையில் உள்ள வர்த்தகர்கள் தங்களது இறக்குமதியைக் குறைத்துக்கொண்டுள்ளனர். முன்பு ஒரு பெட்டி டிராகன் பழத்தின் விலை ரூ.600 வரையில் இருந்தது. ஆனால் இப்போது அதன் விலை ரூ.2,200 வரையில் உயர்ந்துள்ளது.

செர்ரி பழங்களின் விலையும் 60 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. 5 கிலோ எடை கொண்ட செர்ரி பழப் பெட்டியின் விலை ரூ.8,000 ஆக உள்ளது. ஒரு மாதத்துக்கு முன்பு இதன் விலை ரூ.4,500 ஆக மட்டுமே இருந்தது. இந்த விலை உயர்வு குறித்து வாஷியில் உள்ள மொத்த விற்பனை பழ வியாபாரியான சஞ்சய் பன்சாரே, டி.என்.ஏ. இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. 15 முதல் 30 சதவிகிதம் வரையில் விலை உயர்ந்துள்ளதால் இறக்குமதியைக் குறைத்துக்கொண்டுள்ளோம். சில வர்த்தகர்கள் இறக்குமதியையே நிறுத்திவிட்டனர்” என்றார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon