மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

இம்மானுவேல் நினைவு தினம்: கட்சிகள் மரியாதை!

இம்மானுவேல் நினைவு தினம்: கட்சிகள் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 61வது நினைவு தினம் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, பரமக்குடியிலுள்ள அவரது நினைவிடத்தில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் ராணுவ வீரரான இம்மானுவேல் சேகரன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர். இரு வேறு பிரிவு மக்களிடையே ஏற்பட்ட சாதிய மோதலினால், 1957 செப்டம்பர் 11ஆம் தேதியன்று இவர் கொல்லப்பட்டார்.

இவரது நினைவிடம் பரமக்குடி பகுதியில் உள்ள முத்துச்செல்லாபுரம் செல்லும் சாலையில் அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இவரது நினைவிடத்தில் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த நினைவு தினத்தை அனுசரிப்பதற்கு, ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பல்வேறு நிபந்தனைகள் விதித்துள்ளது. இதனால், எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நினைவிடம் செல்லும் வழித்தடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் கூடுதலான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏடிஜிபி விஜயகுமார் தலைமையில், தென்மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் மேற்பார்வையில், 4டிஐஜிக்கள், 12 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், 28 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 5 ஆயிரம் போலீசார் பரமக்குடி நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பரமக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா கூறுகையில், நகரில் 75 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். “உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 750 இரும்பாலான தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கலவரத் தடுப்புப் பிரிவு படை மற்றும் வஜ்ரா வாகனங்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. ஐஐடி மாணவர்கள் உதவியுடன் 3 கி.மீ. சுற்றளவு தூரத்தைக் கண்காணிக்கும் ஆளில்லா உளவு விமானம் பறக்கவிடப்பட்டு, அப்பகுதிகளைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

அஞ்சலி நேரம்

அரசியல் கட்சிகள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நேரத்தில், பரமக்குடி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதிமுக சார்பில் அமைச்சர்கள் ராஜலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில், அன்வர்ராஜா எம்பி மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மதிமுக மாவட்டச் செயலாளர் குணா தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காங்கிரஸ், தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

விடுமுறை

இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கையில் 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம், இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்துள்ளார் சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon