மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: உளுந்து கொழுக்கட்டை!

கிச்சன் கீர்த்தனா: உளுந்து கொழுக்கட்டை!

பொதுவாகவே, விநாயகர் சதுர்த்திக்குப் பூரண கொழுக்கட்டையும், இனிப்புக் கொழுக்கட்டையும்தான் படைத்திருப்பீர்கள். உடலுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடிய, எலும்புகளை வலுவாக்கக்கூடிய உளுத்தம்பருப்பை வைத்து, கொழுக்கட்டை செய்து இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமாகப் படைக்கலாமே. அதற்கான செய்முறை பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு – 3 டம்ளர்

உளுத்தம்பருப்பு – 1 டம்ளர் (100 கிராம்)

காய்ந்த மிளகாய் – 6

தேங்காய் – கால்மூடி

உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க

எண்ணெய் – 2 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

உளுந்து – 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை

பூரணம் செய்ய

முதலில் உளுத்தம்பருப்பை ஒரு மணிநேரம் ஊற வைத்து கொஞ்சம் நீர் சேர்த்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கரகரப்பாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவும். அதன்பின், அரைத்த உளுந்தை இட்லித்தட்டுகள் அல்லது மைக்ரோவேவ்வில் (5 நிமிடங்கள்) வேகவிட்டு வேறொரு வாணலியில் எண்ணெய்விட்டு லேசாக வதக்கி உதிர்க்கவும்.

பின்னர், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பச்சை மிளகாய் சின்ன சின்னதாக நறுக்கி இஞ்சி போட்டு தாளித்துக் கொள்ளவும்.

அதன் பிறகு, தாளித்ததில் உளுத்தம் மாவைக் கொட்டி கிளறி பொலபொல வென்று பூரணம் தயார் செய்யவும். உளுத்தம்மாவில் தேங்காய்த்துருவலையும் சேர்க்கவும்.

மேல் மாவு செய்ய

முதலில், பச்சரிசி மாவைப் பச்சை வாடை போக வறுத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க விடவும்.

வறுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி கொதித்தத் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை உருண்டையாக உருட்டிக் கொள்ளவும். உருட்டும்போது எண்ணெய் தொட்டு உருட்டி வாழையிலைஅல்லது ஜிப்லாக் கவரில் உருண்டையை வைத்து அப்பளம் வடிவில் தட்டிக் கொள்ளவும்.

கொழுக்கட்டை செய்ய

தட்டி வைத்துள்ள மாவில் ஒரு டீஸ்பூன் பூரணத்தை நடுவில் வைத்து மாவைச் சமமாக மடித்து ஓரங்களை ஒட்டவும். இதே போல் அனைத்து உருண்டைகளையும் கொழுக்கட்டைகளாகத் தயாரித்துக் கொள்ளவும். பிறகு, இட்லி குக்கரில் கொழுக்கட்டையை வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்துப் பரிமாறவும். சுவையான, ஆரோக்கியமான உளுந்து கொழுக்கட்டை தயார்!

குறிப்பு

எலும்புகளைப் பலப்படுத்தும் உளுந்து கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தி மட்டும்தான் செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. மாதம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்லது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon