மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

மசூதிகளில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

மசூதிகளில்  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாம்!

விரைவில் வர இருக்கிற நாடாளுமன்ற பொதுத் தேர்தலை ஒட்டி இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் மாதிரி வரைவுப் பட்டியல் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் திருத்தம் செய்ய அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்துக் கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் நிர்வாகிகள் மூலம் அந்தந்த பகுதிகளில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டியிருக்கிறதா என்ற பணிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படியே முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதே நேரம் இதுவரை இல்லாத வகையில் தமிழகத்தில் இருக்கும் மசூதிகளில் தன்னார்வ முஸ்லிம் இளைஞர்கள் வாக்காளர் வரைவுப் பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார்கள். இது இஸ்லாமிய சமூகத்துக்குள் நடக்கும் தன்னெழுச்சியாக பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மசூதியிலும் வழக்கமாக வரும் அந்தப் பகுதி முஸ்லிம் மக்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறார்களா அல்லது பெயர் விடுபட்டிருக்கிறதா என்பதை இந்த இளைஞர்களே கண்காணிக்கிறார்கள். ஒரு லேப்டாப் , வரைவு வாக்காளர் பட்டியல் இரண்டையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். மசூதிக்கு வரும் ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளரின் பெயர், குடும்பத்தினரின் வாக்காளர் பெயர்களை சரிபார்த்து பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்துச் சொல்கிறார்கள். இல்லையென்றால் உடனடியாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது அம்மாநிலத்தில் 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதை கடந்த மார்ச் 25 -2018 அன்று மின்னம்பலத்தில் கர்நாடகா: 15 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் நீக்கம் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.

சமூக ஆர்வலரும், கல்வியாளரும், இந்தியன் யூனியன் காயிதே மில்லத் லீக்கின் தலைவருமான தாவூத் மியாகான் இதுபற்றி அந்தச் செய்தியில் விரிவாக சொல்லியிருந்தார். மேலும் சச்சார் கமிட்டியின் செயலாளர் அபூ சாலெஹ் ஷெரிப் தலைமையில் உள்ள தொண்டு நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் 12 லட்சம் முஸ்லிம் வாக்காளர்கள் தமிழகத்தில் மட்டும் நீக்கப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலையும் அவர் வெளியிட்டார்.

மியாகான் கூறிய தகவலின்படி, மாதிரி (sample) யாக சென்னை துறைமுகம் மற்றும் கோவை தொண்டாமுத்தூர் மற்றும் குமரி பத்மநாபபுரம் தொகுதிகளின் வாக்கு நீக்கம் பற்றிய விவரங்கள் தயாரிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு, தற்போது துறைமுகம் தொகுதி வாக்கு நீக்க விவரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் ஏறக்குறைய 30 விழுக்காடு முஸ்லிம் வாக்குகள் நீக்கப்பட்டிருப்பதற்கான பட்டியல் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நம்மிடம் பேசிய முஸ்லிம் பெரியவர்கள்,

“விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில் தமிழகத்தில் முஸ்லிம்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கப்படுவதை கட்சி ரீதியாக எதிர்கொள்வது கஷ்டம். என்னதான் முஸ்லிம் கட்சிகள் இதில் போராட்டம் நடத்தினாலும் ஒவ்வொரு முஸ்லிமையும் தினந்தோறும் சந்திக்கும் மசூதிகளில் இதை செய்வது என்று முடிவெடுத்து முஸ்லிம் பெரியவர்கள் மத்தியில் பேசினோம். அதன்பின் மசூதிகளிலேயே வாக்காளர் பட்டியலை சரிபார்க்கச் சொல்லியிருக்கிறோம். இது இப்போது ஆரம்பித்து நடந்து வருகிறது.

முஸ்லிம்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்படும் நிலையில் அதை தேர்தலில் தட்டிக் கேட்கலாம் என்று காத்திருக்கிறார்கள். ஆனால் வாக்குரிமையே திட்டமிட்டு மறுக்கப்படும் பட்சத்தில் தேர்தலில் போலி ஜனநாயக முடிவுகளே கிடைக்கும்.

எனவேதான் மசூதிகளில் வாக்காளர் வரைவுப் பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்க்கிறோம். முஸ்லிம்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கட்டும். ஆனால் வாக்குரிமை இல்லாமல் இருந்துவிடக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த சரிபார்த்தல் பணிகள் நடக்கிறது” என்கிறார்கள்.

-ஆரா

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon