மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

வரதட்சணை: 2 திருமணங்கள் நிறுத்தம்!

வரதட்சணை: 2 திருமணங்கள் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நாளை (செப்டம்பர் 12) நடைபெறவிருந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவருடைய திருமணம் வரதட்சணைப் பிரச்சினையால் நின்றுபோனது.

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிவருபவர் சூரியகலா. இவருக்கும், மணப்பாறையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்துவரும் சாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று, இவர்கள் இருவருக்கும் திண்டுக்கல்லில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 12ஆம் தேதி மணப்பாறையில் திருமணம் நடைபெற முடிவானது.

இதற்கிடையில், பெண் வீட்டாரிடம் ரூ.15 லட்சம் வரதட்சணை கேட்டுள்ளனர் மாப்பிள்ளை வீட்டார். வரதட்சணை தரவில்லையென்றால், திருமணத்தை நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளனர். இதையடுத்து அருண்குமார், அவரது தாயார் சகோதரி, மாமா ஆகியோர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சூரியகலா.

அதே நேரத்தில், மணப்பெண்ணுக்கு இருக்கும் நோயை மறைத்துத் திருமணம் செய்ய முயற்சிப்பதாக சூரியகலா மீது அருண்குமார் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

100 சவரன் வரதட்சணை

திருச்சி பியூர் செம் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் கொள்முதல் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி வருபவர் மகேந்திரன். இவருக்கும் காட்டூரைச் சேர்ந்த ஆசிரியை சுகந்தி என்பவருக்கும், கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 50 சவரன் நகையும், 5 லட்சம் ரொக்கமும் தருவதாகப் பேசி முடிவு செய்யப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் செப்டம்பர் 12ஆம் தேதியன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 100 சவரன் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்தினர் மாப்பிள்ளை வீட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மணமகன் மகேந்திரன் கைது செய்யப்பட்டார். தலைமறைவான மணமகனின் தாய், தந்தை, சகோதரியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒரே நாளில் திருச்சி வட்டாரத்தில் இரண்டு திருமணங்கள் வரதட்சணைப் பிரச்சினையால் நின்று போனது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon