மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

பத்திரிகையாளருக்கு மிரட்டல்: வலுக்கும் கண்டனங்கள்!

பத்திரிகையாளருக்கு மிரட்டல்: வலுக்கும் கண்டனங்கள்!

பெண் பத்திரிகையாளருக்கு அரசு ஒப்பந்ததாரர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஒப்பந்த பணிகளை வழங்கியுள்ளதாக டைம்ஸ் நவ் ஊடகம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும், இந்த புகாருக்கு அமைச்சர் வேலுமணி மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கோமல் கௌதமுக்கு ஒப்பந்ததாரர் சந்திர பிரகாஷ் மிரட்டல் விடுத்ததாகப் புகார் கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக, கோவை மாவட்ட காவல் ஆணையர் பெரியய்யாவிடம் ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் ராதிகா புகார் அளித்தார். அதில், பெண் பத்திரிகையாளர் கோமல் கௌதமை மிரட்டிய சந்திர பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர் சந்திர பிரகாஷைக் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (செப்டம்பர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் வேலுமணி தனது உறவினர்களுக்கும் கூட்டாளிகளுக்கும் முறைகேடாக மாநகராட்சி பணி ஒப்பந்தங்கள் அளித்துப் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. இதை அடுத்து, ஒப்பந்தக்காரர் சந்திர பிரகாஷ் 'டைம்ஸ் ஆப் இந்தியா' பெண் பத்திரிகையாளர் ஒருவரை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளில் மிரட்டியதோடு மட்டுமல்லாமல், அவர் மீது அவதூறும் பரப்பியுள்ளார். வேலுமணியின் நெருங்கிய கூட்டாளியான இவரது செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பழனிச்சாமி அரசின் ஆட்சியில் ஊடகங்கள் மிரட்டப்படுவதும், பத்திரிகையாளர்கள் குறிப்பாக பெண்கள் தரக்குறைவான வார்த்தைகளால் அவமானப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. பெண் பத்திரிக்கையாளர்களைப் பற்றி அவதூறான கருத்து தெரிவித்த எஸ். வி. சேகர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இந்த அடிமை அரசு எடுக்காத நிலையில், அமைச்சர் ஒருவரின் நெருங்கிய கூட்டாளியே தற்போது பெண் நிருபரை தரக்குறைவாக பேசியிருக்கிறார்

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுக்கே இத்தகைய பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவிவருகிறது என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. காவல்துறையினர் உடனடியாக சந்திரபிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளியாகிவரும் விரக்தியில், கருத்துச் சுதந்திரத்தை நசுக்க முயலும் பழனிச்சாமி அரசிற்கு விரைவில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்று (செப்டம்பர் 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நிறுவனங்கள், மாநகராட்சி ஒப்பந்தங்களை முறைகேடாக எடுத்துள்ளது.” என்ற புலனாய்வுச் செய்தித் தொகுப்பினை கடந்த 04-09-2018 அன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

இதனைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தியாளர் கோமல் கௌதம், டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கோவைப் பதிப்பின் துணை ஆசிரியர் மயில்வாகனன் ஆகியோரைத் தொடர்புகொண்ட மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சந்திரபிரகாஷ் , தரக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதுடன் மிக மோசமாக மிரட்டியுள்ளார். பெண் பத்திரிகையாளர் கோமல் கௌதமிடம் , வாட்ஸ் அப்பில் நாகரீகமற்ற முறையில் தகவல்களை அனுப்பி அவதூறு செய்துள்ளார் சந்திர பிரகாஷ்.

பத்திரிகையாளர்கள் மீதான இந்த மிரட்டல் போக்கினை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.

பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், தரக்குறைவாகச் சித்தரிக்க முயற்சிப்பதும் கருத்துரிமையை – ஊடக உரிமைகளை நசுக்கும் போக்கு என்றே சென்னை பத்திரிகையாளர் மன்றம் கருதுகிறது. பத்திரிகையாளர்களிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஒப்பந்ததாரர் சந்திர பிரகாஷ் மீது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் சார்பில் சென்னை பெருநகரக் காவல் ஆணையரிடம் புகார் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon