மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 1 ஏப் 2020

ஹாரர் நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகாந்த்

ஹாரர் நாயகியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த், சந்திரிகா ரவி ஆகியோர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர்.

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீகாந்த் ஆரம்ப காலங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். ஆனால், தனது திரைப்பயணத்தில் வலுவான வெற்றியைப் பதிவு செய்யாத அவருக்குப் பட வாய்ப்புகளும் குறைந்தன. விஜய்யுடன் இணைந்து நடித்த நண்பன் படம் அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது. ஆனால், தொடர்ந்து வந்த படங்கள் பெரிதாகக் கவனம் பெறாததால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராகச் சென்றார்.

தனுஷ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக அல்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களில் நடிப்பாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள இயக்குநர் ஹாஷிம் மாரிகர் திரைக்கதை எழுதி இயக்கும் புதிய படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இருமொழிகளில் தயாராகி வருகிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் பேயாக நடித்து பயமுறுத்திய சந்திரிகா ரவி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் மூலம் மலையாள நடிகரும் மம்மூட்டியின் மருமகனுமான மக்பூல் சல்மான் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். விரைவில் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon