மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

விநாயகர் சிலை கட்டுப்பாடுகள்: தமிழிசை எதிர்ப்பு!

விநாயகர் சிலை கட்டுப்பாடுகள்: தமிழிசை எதிர்ப்பு!

விநாயகர் சிலை வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முதல்வர் நீக்க வேண்டும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் பணிகளும் நடந்துவருகின்றன. விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு வட்டாட்சியர், காவல் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

விநாயகர் சிலை வைக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து விநாயகர் சிலைகளை வைக்கவே முடியாது என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர்களின் கவனமாக இருப்பது கண்டனத்துக்குரியது. தமிழக முதலமைச்சர் உடனே தலையிட்டு தேவையற்றக் கட்டுப்பாடுகளை நீக்கி தெருவெங்கும் விநாயகர் மக்கள் விநாயகராக இடம்பெற்று அருள் தர வழிவகை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, “விநாயகர் சதுர்த்திக்காக பொது இடங்களை ஆக்கிரமித்து சிலைகள் வைக்க கூடாது, சாலைகள் ஆக்கிரமித்தும், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியை பெறாமலும் பல இடங்களில் சிலை வைக்கப்படுவதால் சிலை வைப்பதற்கு அரசு விதித்துள்ள விதிகளுக்கான அரசாணையும் ரத்து செய்ய வேண்டும் சிலை வைக்க பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது” என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த கண்ணதாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் முன் இன்று (செப்டம்பர் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஏன் விநாயகர் சிலைகளை வைக்கக் கூடாது?. அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தும் போது கொடுத்த விதிகளை முறையாகப் பின்பற்றுகிறார்களா?. மின்சாரத்தை திருட்டு தனமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி பொது கூட்டங்கள் நடத்தவில்லையா?. அனுமதிக்கப்பட்ட இடத்தை தாண்டி பொதுக்கூட்டங்களால் நடத்தப்படுவதால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படவில்லையா?. அந்த வகையில் அரசு வகுத்த விதிகள் படி விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைப்பது எப்படி சட்ட விரோதமாகும்” என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். இவ்வழக்கை பொதுநல வழக்காக கருத முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon