மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

சுதா பரத்வாஜை விடுதலை செய்ய ஐஐடி கோரிக்கை!

சுதா பரத்வாஜை விடுதலை செய்ய ஐஐடி கோரிக்கை!

மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜை விடுதலை செய்ய வேண்டும் என்று கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடந்த மாதத்தில் மாவோயிஸ்ட்டுகளிடம் தொடர்பு உள்ளதாக நாட்டிலுள்ள முக்கிய மனித உரிமைப் போராளிகளான வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவர ராவ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்களை விடுவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், ஐநாவின் மனித உரிமை கவுன்சிலும் கோரிக்கை விடுத்துள்ளன. சுதா பரத்வாஜ் கான்பூர் ஐஐடியில் படித்த முன்னாள் மாணவர்.

இது தொடர்பாக, கான்பூர் ஐஐடி பேராசிரியர்கள்,ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அறி்க்கை ஒன்றை நேற்று (செப்டம்பர் 10) விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமூகச் செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள்,பேராசிரியர்கள்,பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோரை அச்சுறுத்த திட்டமிட்டே நடத்தப்பட்டதுதான் இந்த கைதுகள்.

சுதா பரத்வாஜ் புகழ்பெற்ற சமூகப் பணியாளர். அவர் 30 ஆண்டுகளுக்கு மேலாக விளிம்பு நிலை மக்களுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர். 1984இல்,அவர் கணிதத்தில் முதுநிலைப் பட்டத்தை ஐஐடியில் படித்து முடித்தார். சமூக உணர்வுள்ள அவர் 1986இல் சத்தீஸ்கருக்கு சென்று அங்குள்ள தொழிலாளர்கள் அமைப்பு மற்றும் தொழிற்சங்கத்துடன் இணைந்து பாடுபட்டார். இங்குதான் அவர் முழுமையான தொழிற்சங்கவாதியாக பரிணமித்தார். பின்னர் தொழிலாளர்களின் வழக்குகளுக்காக சட்டம் படித்து வழக்கறிஞராகவும் மாறினார்.

சுதா பரத்வாஜ் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். மனித உரிமைப் போராளிகள் கைது செய்யப்பட்டது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் சுதந்திரமானதும் பாரபட்சமற்றதுமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறி்க்கையில் கூறப்பட்டிருந்தது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon