மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

சிலைக் கடத்தல்: செப்.24இல் விசாரணை!

சிலைக் கடத்தல்: செப்.24இல் விசாரணை!

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரிக்காவிட்டால் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சிலைக் கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு இதனை விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கில், சிபிஐக்கு வழக்கு மாற்றப்படும் என்ற அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர் நீதிபதிகள்.

இந்த வழக்கு, இன்று (செப்டம்பர் 11) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மறுத்தால் என்ன செய்வீர்கள் என்று தமிழக அரசுக்குக் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள். “சிபிஐ மறுக்க வாய்ப்பில்லை; ஏனென்றால், சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்புமாறு மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும் கேட்டுள்ளது” என்று தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. இதனால், உடனடியாகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

இதற்கு மனுதாரர் யானை ராஜேந்திரன் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. “இந்த அரசாணை பிறப்பித்ததற்கான காரணம் குறித்து, தமிழக அரசு இதுவரை ஒரு ஆவணத்தைக் கூட தாக்கல் செய்ய வில்லை. அந்த அசல் ஆவணங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கூடாது” என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை சிபிஐக்கு மாற்றியது குறித்த தமிழக அரசின் ஆவணங்களை நாளை (செப்டம்பர் 12) நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் செப்டம்பர் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon