மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

இங்கிலாந்திடம் கற்றுக்கொண்ட ஷமி

இங்கிலாந்திடம் கற்றுக்கொண்ட ஷமி

இங்கிலாந்து ஆடுகளங்களில் எப்படி பந்துவீச வேண்டும் என அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டதாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் முடிவுற்ற நிலையில் இந்தியா 1-3 என தொடரை இழந்துள்ளது. பந்துவீச்சாளர்கள் அவர்களது பணியைச் சிறப்பாகச் செய்திருந்த போதிலும், பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

2014ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின்போது இருந்த இந்தியாவின் பந்துவீச்சிற்கும், இந்த முறை இருந்த பந்துவீச்சிற்கும் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்துப் பேசிய முகமது ஷமி, "2014ஆம் ஆண்டு பயணத்தின்போது நான் செயல்பட்டதைக் காட்டிலும் இம்முறை சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஒட்டுமொத்தமாக இந்திய பந்துவீச்சு சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக வெளிநாட்டு மைதானங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும்; எவ்வளவு துல்லியம் வேண்டும் போன்றவற்றில் தெளிவு கிடைத்திருக்கிறது.

கடந்த முறை இந்தியா இங்கு வந்திருந்தபோது எனக்கு போதிய அனுபவம் இல்லை. முதிர்ச்சியும் இல்லை. இம்முறை இங்கிலாந்து சூழ்நிலைகளில் எந்த இடத்தில் பந்துவீச வேண்டும் என்பதை ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரின் பந்துவீச்சு வீடியோக்களை பார்த்து அதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் மந்தமான ஆட்டம், பின்னர் குடும்ப பிரச்சனைகள் உள்ளிட்ட சிக்கல்களுக்கு ஆளான ஷமி, இந்தத் தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon