மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 16 ஜூலை 2020

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : ஜெயக்குமார் விளக்கம்!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : ஜெயக்குமார் விளக்கம்!

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்குத் தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வரும் 30ஆம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா பிரமாண்டமாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு இன்னும் 19 நாட்கள் இருக்கும் நிலையில், தேசிய தலைவர்களை அழைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து கட்சித் தலைமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று கூறியுள்ளார்.

எழுவர் விடுதலை தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, ஏழுபேரை விடுவிப்பதுதான் அதிமுக அரசின் நிலைப்பாடு. அதில் எந்த மாறுபட்ட கருத்தும் அரசுக்கு கிடையாது. இவர்களை விடுவிப்பது தொடர்பாக 2016ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு அதிமுக அரசு கடிதம் எழுதியது. அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இந்திய அரசியலைப்புச் சட்டம் 161ன் படி, இவ்விவகாரத்தில் மாநில அரசு முடிவெடுக்கலாம், என்பது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எடுக்கப்பட்ட முடிவுடன் ஒத்துப்போவதால் அதனை அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதையடுத்து, அமைச்சரைக் கூட்டத்தில் ஏழு பேரை விடுவிக்க முடிவெடுத்து, ஆளுநருக்குப் பரிந்துரைக்கப்பட்டது. தமிழக மக்களின் உணர்வை மதித்து ஆளுநரும் ஒப்புதல் அளிப்பார் என்று நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஏழுபேரை விடுவிப்பது தொடர்பாக காங்கிரஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்த ஜெயக்குமார், இதற்கு கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமிழகத்தோடு ஒத்துபோக வேண்டும் என்று கூற திமுக தலைவர் ஸ்டாலின் தயாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்கு மனம் இருக்கிறது, ஆனால் முடியவில்லை என்றும் தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.6000 கோடியை மத்திய அரசு வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியைக் குறைக்க தயார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon