மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

மூன்றே மாதத்தில் இடிந்த பாலம்!

மூன்றே மாதத்தில் இடிந்த பாலம்!

மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ ஆற்றின் மீது புதிதாகக் கட்டப்பட்ட பாலமொன்று, மூன்றே மாதத்தில் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து விரைவில் விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்.

தென்மேற்குப் பருவமழையால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாயும் குனோ, சம்பல் மற்றும் சீப் ஆறுகளில் வெள்ளம் பாய்கிறது. அங்குள்ள ஷிவ்புரி மற்றும் ஷியோபூர் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமையன்று (செப்டம்பர் 8) குனோ ஆற்றில் கடுமையான வெள்ளம் பாய்ந்ததால், ஷிவ்புரி மாவட்டத்தில் போரி பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலமொன்று கடுமையான சேதத்தைச் சந்தித்தது. இதன் பெரும்பான்மையான பகுதி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 3 மாதங்களே ஆகிறது.

குனோ ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த பாலமானது, கடந்த ஜூன் 29ஆம் தேதியன்று தான் திறக்கப்பட்டது. இதனையொட்டி நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்துகொண்டார். இந்த பாலம் கட்டுவதற்கு 7.78 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

பாலத்தைத் திறந்து வைத்துப் பேசிய தோமர், இது ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார். மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காக, எதைச் செய்யவும் மத்திய பாஜக அரசு தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். இதுபற்றி டைம்ஸ் நௌ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பாலம் பொதுப்பணித் துறையால் கட்டப்பட்டதாகவும், இதுகுறித்த விரிவான அறிக்கையை வரும் திங்கள் கிழமையன்று (செப்டம்பர் 17) பெறவுள்ளதாகவும், அதன்பின் பாலம் கட்டுமானம் குறித்த விசாரணைக்குப் பரிந்துரை செய்யவிருப்பதாகவும் கூறினார் ஷிவ்புரி மாவட்ட ஆட்சியர் ஷில்பி குப்தா. பாதிப்புக்குள்ளான போரி பகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பிரகலாத் பாரதி, இந்த பாலத்தை மோசமாகக் கட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினார். இதுகுறித்து, ம.பி. சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வெள்ளப் பாதிப்பினால் சுமார் 500 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் ஷிவ்புரி மாவட்ட நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையவுள்ளதால், அங்கு விரைவில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையிலேயே, புதிதாகக் கட்டப்பட்ட போரி பாலம் இடிந்து விழுந்தது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon