மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 16 ஜூலை 2020

ராணுவத்தில் பணியிடங்களைக் குறைக்க முடிவு!

ராணுவத்தில் பணியிடங்களைக் குறைக்க முடிவு!

இந்திய ராணுவத்தில் 1.5 லட்சம் பணியிடங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவையற்ற பணியாளர்களை நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் முடிவு செய்தது. அப்போதைய கணக்கெடுப்பின்படி, சுமார் 57,000 பணியாளர்கள் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவர்களை வேறு பணிக்கு மாற்றுவது அல்லது விருப்ப ஓய்வு அளிப்பது என்று அப்போது முடிவு செய்யப்பட்டது.

மத்திய பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 12.8 லட்சம் கோடியில், ராணுவத்துக்கான தினசரிச் செலவுக்கும், வீரர்களின் சம்பளத்திற்கும் 83 சதவிகிதத் தொகை செலவு செய்யப்படுகிறது. இதில், ஓய்வூதியத் தொகைக்குத் தனியாகப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீதம் இருக்கும் 17 சதவிகிதத் தொகை மட்டுமே, அதாவது 26,826 கோடி ரூபாய் ஆயுதங்களைப் பராமரிக்கவும், ராணுவத்தை நவீனப்படுத்தவும் செலவிடப்படுகிறது. இது போதுமானதாக இல்லை என்று இந்திய ராணுவம் கருதுகிறது. ”1.5 லட்சம் பணியிடங்களைக் குறைத்தால், ரூ.5 ஆயிரம் கோடி முதல் ரூ.7 ஆயிரம் கோடி வரை செலவு மிச்சமாகும். இதன் மூலம் ஆயுதங்களைப் பராமரிக்கவும், புதிய கருவிகளை வாங்கவும் ரூ.31,826 கோடி முதல் ரூ.33, 826 கோடி வரை கிடைக்கும்” என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய ராணுவச் செயலர் சரத் தலைமையில் 11 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. ராணுவத்தின் பல துறைகளை ஒன்றிணைப்பதால், தற்போது அதன் பணித்திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பணியாளர்களைக் குறைத்து செலவை மிச்சப்படுத்தலாம். அந்த பணத்தை போர்க்கால நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தலாம். அதன்படி, வருகிற இரண்டு ஆண்டுகளில் சுமார் 50,000 பணியாளர்களைக் குறைக்கலாம். இதைத் தொடர்ந்து, 2022-23 ஆம் ஆண்டுக்குள் 1 லட்சம் பணியாளர்களைக் குறைக்கலாம் என்று அதன் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராணுவம் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. தற்போது, ஒவ்வொரு ஆண்டும் ராணுவத்தில் இருந்து 60,000 வீரர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர்.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon