மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 28 மா 2020

கலைஞர் பெயரில் இருக்கை: புதுவை அமைச்சரவை!

கலைஞர் பெயரில் இருக்கை: புதுவை அமைச்சரவை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் கலைஞரின் பெயரில் ஒரு இருக்கை அமைக்க புதுச்சேரி அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்றிரவு (செப்டம்பர் 11) நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன், தலைமைச் செயலர் அஸ்வனி குமார், நிதி செயலர் கந்தவேலு, வளர்ச்சி ஆணையர் அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் இரண்டரை மணிநேரம் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “தற்போது நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 27 விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மறைந்த திமுக தலைவர் கலைஞரின் புகழைப் போற்றும் வகையில் புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள இந்திராகாந்தி சிலை - ராஜீவ்காந்தி சிலை ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிக்கு டாக்டர் கலைஞர் சாலை என்று பெயர் சூட்ட முடிவெடுத்துள்ளோம். அதேபோல காரைக்கால்-திருநள்ளாறு புறவழிச்சாலைக்கும், அங்குள்ள பட்ட மேற்படிப்பு மையத்திற்கும் டாக்டர் கலைஞர் பெயரை சூட்ட முடிவு செய்துள்ளோம். மேலும் கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கலைஞர் பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி வருகிறோம்”என்றார்.

மேலும், “மழை வெள்ளம் ஏற்பட்டு மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக நிவாரண நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மழை காலத்திற்கு முன்னதாக ஏரி, குளங்களை தூர்வார அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக”தெரிவித்தார்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருக்கை, மற்றும் காரைக்கால் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும். மேற்படிப்பு கல்லூரி கலைஞரின் பெயரால் ஆரம்பிக்கப்படும். கோட்டுச்சேரி-திருநள்ளார் பைபாஸ் சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் ஒரு தெருவிற்கு கலைஞரின் பெயர் வைக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் நாராயணசாமி கூறியிருந்த நிலையில், தற்போது அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon