மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

அமைச்சர் வேலுமணியை நீக்க வேண்டும்!

அமைச்சர்  வேலுமணியை  நீக்க வேண்டும்!

அமைச்சர் வேலுமணியின் ஊழல் புகார் குறித்த விசாரணை நேர்மையாக நடைபெற, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அமைச்சர் வேலுமணி உள்ளாட்சித் துறை தொடர்பான ஒப்பந்தங்களை வழங்கியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை டைம்ஸ் நவ் ஊடகம் கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது. இதை மறுத்த வேலுமணி, டைம்ஸ் நவ் ஊடகத்தின் மீது வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஆலந்தூரிலுள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அலுவலகத்துக்கு நேற்று (செப்டம்பர் 10) சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் புகார்களில் சிக்கியுள்ள அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவருடைய இலாகாக்களுக்கு உட்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தும் ஏழு நிறுவனங்களுக்கு மட்டும் கொடுக்கப்படுகின்றன. அவை அமைச்சரின் பினாமி நிறுவனங்கள். இதில் சம்பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் சென்னையிலும் மற்ற இடங்களிலும் ஜுவல்லரிகளிலும் ஹோட்டல்களிலும் முதலீடு செய்யப்பட்டு அதில் வேலுமணியின் உறவினர்கள் பங்குதாரர்களாக உள்ளனர். இவற்றை ஆதாரபூர்வமான சமர்ப்பித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும் தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையைக் கொள்ளையாட்சித் துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் பினாமி நிறுவனங்கள் என்று எட்டு நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இந்த நிறுவனங்கள், அமைச்சரின் துறைகளில் முழு ஆதிக்கம் செலுத்துவது மட்டுமின்றி, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களையும் பெறுகின்றன என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலுமணி அமைச்சரான பிறகு, இந்நிறுவனங்களின் பிசினஸ் உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ள ஸ்டாலின், “அமைச்சர் வேலுமணி ஊழல் திருவிளையாடல்கள் அரங்கேற்றி அதிமுக அமைச்சரவையில் மற்றவர்களையெல்லாம் தோற்கடித்து, முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார்” என்றும் விமர்சித்துள்ளார்.

“942 கோடி ரூபாய் உபரி நிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஊழல் டெண்டர்களால் சூறையாடப்பட்டு, இன்றைக்கு 2,500 கோடி ரூபாய் கடனில் மாநகராட்சி மூழ்கியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ள அவர், “இதுவரை வரலாறு கண்டிராத “மஹாமெகா” ஊழலில் ஈடுபட்டுள்ள “வீரதீர மிக்க” அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்தப் பதவியில் நீடிப்பதற்கு, தார்மீக ரீதியாகச் சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் நியாயமான நேர்மையான சட்டத்துக்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊழல் குறித்த தகவலை வெளியிட்டதற்காக “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகையாளர்களை மிரட்டியதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், பத்திரிகையாளர்களை மிரட்டிய கான்டிராக்டர் சந்திரபிரகாஷை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon