மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

குட்கா: 5 பேருக்கு சிபிஐ கஸ்டடி!

குட்கா: 5 பேருக்கு சிபிஐ கஸ்டடி!

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

குட்கா ஊழல் விவகாரத்தில் குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்களான உமாசங்கர் குப்தா, சீனிவாச ராவ், மத்திய கலால் துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், உணவுத் துறை அதிகாரி செந்தில் முருகன் உள்ளிட்ட ஐந்து பேரை கடந்த 5ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அன்றைய தினமே அவர்கள் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் மாதவ ராவ் உட்பட ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென சிபிஐ சார்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஐந்து நாட்கள் வரை விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீலபிரசாத் முன் நேற்று (செப்டம்பர் 10) விசாரணைக்கு வந்தது.

“சிபிஐ காவலில் தங்களை விசாரிக்க அனுமதிக்கக் கூடாது. சிபிஐ அதிகாரிகள் சம்மன் கூட வழங்காமல் விசாரணைக்கு அழைத்து கைது செய்தனர்” என்று மாதவ ராவ் உள்ளிட்ட ஐவர் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்குப் பதில் வாதம் வைத்த சிபிஐ தரப்பு, “குட்கா விவகாரம் தொடர்பாக மாதவ ராவுக்குச் சொந்தமான குடோனில் வருமான வரித் துறை சோதனை நடத்தியபோது டைரியும் கைப்பற்றப்பட்டது. அதில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில் முருகன், குட்கா தடை செய்யப்பட்ட 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 2.5 லட்சம் ரூபாய் லஞ்சமாக வாங்கியிருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கலால் வரித் துறை அதிகாரிக்கும் 25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. குட்கா உற்பத்தியைத் தடுக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளதால், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து ஐந்து பேரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது” என்று தெரிவித்தது. ரூ.300 கோடிக்கும் மேல் சட்ட விரோதப் பணப் பரிமாற்றமும் நடைபெற்றதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி திருநீலபிரசாத், மாதவ ராவ் உள்ளிட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon