மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

சிறப்புக் கட்டுரை: மகாகவி கண்ணபாரதி

சிறப்புக் கட்டுரை: மகாகவி கண்ணபாரதி

ஸ்ரீராம் சர்மா

எட்டயபுரத்தில் பிறந்து காசி மாநகர் கடந்து திருவல்லிக்கேணி மண்ணைத் தேர்ந்தெடுத்து விண்ணேறிய புரட்சி சித்தர்.

தமிழை ஆழ அளந்த ஞானாசிரியர்.

வறுமையைப் புறந்தள்ளி அளப்பரிய படைப்புகளைத் தமிழுக்கு அள்ளித் தந்து நாற்பதே வயதுக்குள் தன் கர்மாவை முடித்துக்கொண்டு கிருஷ்ணாம்பேட்டை சுடுமேடையேறி “வந்தேன்” என எரிந்து நிறைந்தவர் மகாகவி பாரதியார்!

“அந்தணன் என்போன் அறவோன்” என்னும் குறளின் பொருளைப் பாருக்கு உணர்த்தி நின்று வாழ்ந்து காட்டிய இந்தியத் தமிழ் மண்ணின் ஈடுஇணையற்ற பெருங்கவி பாரதியார்.

அவரது பண்பறம், படிப்பறம், தமிழறம், சொல்லறம், சமூக அறம், காதல் அறம், பெண்ணறம், அரசியல் அறம், காவிய அறம், வேதாந்த தத்துவ ஞான அறம் அனைத்தும் உயிர் உள்ளளவும் ஊன்றியூன்றிக் களிக்கத்தக்கன.

அன்பிற்கினிய நண்பர் மின்னம்பலத்து அரவிந்தன் அவர்கள் பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11 வருகிறது. பாரதி கண்ட கண்ணனைப் பற்றி நீங்கள் எழுதினால் நல்லாயிருக்கும் என்றார்.

கேட்ட மாத்திரத்தில் எனக்கு “திக்” என்று இருந்தது. கூடவே ஆசையும் மேலிட்டது.

பாரதியாரை ஊன்றிப் படித்தவன் என்பதால் அவர் பெயரைக் கேட்டாலே எனக்குள் புளகாங்கிதமும் கூடவே நடுக்கமும் கூடிக்கொள்ளும்.

பள்ளி செல்லும் காலத்தில் திருவல்லிக்கேணியில் பாரதியார் வாழ்ந்த வீட்டுக்கு வெளிப்புறத்தில் வரிசையாக வேல் போன்று அமைந்த வேலியில் எனது மர ஸ்கேலைப் படபடவென உரசியபடியே சென்று இறுமாந்தவன் நான்.

என்னைப் பொறுத்தவரை கண்ணன் பரம்பொருள் என்றால் பாரதியும் அவ்வாறே.

மாபாரத காலத்து நர – நாராயணர் போலக் கண்ணனோடு இரண்டறக் கலந்தவர் பாரதியார் என்பது எளியேனின் துணிபு.

பாரதியும் – கண்ணனும் வங்கக்கடல் என்றால் அடியேன் அந்தக் கடற்கரை மணற்வெளிக்கப்பால் தார் ரோட்டில் சுமார் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் பொடியன். அவ்வளவே.

பாரதியார் வாழ்ந்த அதே தெருவில் நானும் சில காலம் வாழ்ந்தேன் என்னும் சலுகை மட்டுமே அவரைக் குறித்து எழுதிவிடப் போதுமா?

ஆசைதான் வெட்கமறியுமா?

துணிகிறேன். வழிநடத்துக பரம் பொருளே!

பாரதியை அறிதல்

பாரதி என்னும் பேரறிவாளரை அவர் வாழும் காலத்தில் அறிந்து ஆராதித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இடுகாட்டுச் சிதையில் கிடத்தப்பட்டிருந்த அந்தப் பெருமகனுக்கு தீ வைக்கக்கூட ஆளில்லை. காரணம் அச்சம்.

தேச விடுதலை பாடிய பாரதியாருக்குக் கொள்ளி வைத்தவன் நீதானே என்று பிரிட்டிஷ் அரசாங்கம் பிடித்துக்கொண்டு போய்விடுமோ என்னும் அடிமைப் பேரச்சம்.

முடிவில், ஆஷ் துரை குற்ற வழக்கில் இரண்டாவது எதிரியான பாரதியாரின் சீடர் சங்கரகிருஷ்ணன் அவர்களின் உறவினரான கடையநல்லூர் ஹரஹர சர்மாதான் பாரதியாரின் சிதைக்குத் துணிந்து முன்வந்து கசிந்து தீ மூட்டினார்.

அந்தப் பேரறிவு மறைந்த பின்பு அதற்குச் சொந்தம் கொண்டாடி ஒளி சேர்த்துக்கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களின் தமாஷ் கதைகளை எல்லாம் பாழும் விற்பனை உலகம் காசுக்காகக் கடத்தியதும் உண்டு.

அந்தப் பதிவுகளில் இதில் இரண்டு, அதில் மூன்று போன்ற டோபிக் கணக்குகளே அதிகம். அது அநாவசியம். அதனை நிமிர்ந்த வாசக உள்ளம் கொச்சை எனவே கொள்ளும்.

பாரதியாரின் படைப்புகள் அனைத்தும் கவிதைகளும் கட்டுரைகளுமாக இங்கே பரந்து நிறைந்து கிடக்கின்றன.

ஒரு படைப்பாளனை அவனது படைப்பின் வழிதொட்டே உள்வாங்கிக்கொள்ள வேண்டும். முடியும்.

அதுதான் அறிவார்ந்தோர்க்கு அழகு.

கண்ணபாரதியின் கவி உள்ளம்!

கம்பன், ஔவை, ஆண்டாளுக்கு ஈடாக சொல் பொருள் ஆட்சியோடு தமிழை ஆண்ட பரப் பிரம்மமாகவே பாரதியாரை உணர்கிறேன்.

பாரதியாரின் அகண்ட கவி உள்ளத்தைக் காண ஓர் ஆயுள் போதாது.

பாரதியின் கண்ணன் பாடல்களை மட்டும் கொண்டு அவரது எண்ணத்தை, ஏக்கத்தை என் வழியே இங்கே சுருங்கப் பதிக்க முயல்கிறேன்.

இதன் வழியே பாரதியாரை முழுவதுமாகப் படிக்கும் ஆவலை வாசகர்கள் கொண்டு விடுவார்களேயானால் அது இந்தக் கட்டுரைக்கு கிடைத்த ஆகச் சிறந்த வெகுமானமாகக் கருதி நெக்குருகி நன்றி பாராட்டுவேன்.

பாரதியாரின் அன்னை!

கண்ணபெருமானைத் தன் அன்னையாக வரித்துக்கொண்ட பாரதியார் இவ்வாறு நெகிழ்கிறார்...

உயிரே அவளது முலை. உணர்வே அவளது பால். அதனை வந்து, வந்து வலிந்து ஊட்டிவிடும் பாசத்தின் சிகரம் அவள்.

ஊட்டிவிடும் போதினில் சந்திர சூரிய அண்ட சராசரக் கதைகளை எனக்குச் சொல்வாள்.

எனக்குச் சலிப்பு மேலிடும்போதெல்லாம் சுதாரித்துக்கொள்வாள்.

மேலும், எனக்கு சுவாரஸ்யம் ஊட்ட எண்ணி பற்பல பொய்க் கதைகளையும் பூதக் கதைகளையும் சொல்லி நகைப்பூட்டுவாள்.

கோத்த பொய் வேதங்களும் – மதக்

கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்

மூத்தவர் பொய் நடையும் – இள

மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்.

அவை புனைவுகள்தான் என்று தெரிந்தும் அவளது முலைப் பாலை விரும்பி ஏற்றேன். எனக்குத் தெரியும். அவள் என்னை விட்டுக் கொடுத்துவிட மாட்டாள்.

ஆண்டருள் புரிந்திடுவாள் – அண்ணன்

அருச்சுனன் போலெனை ஆக்கிடுவாள்

பகவத் கீதையின் விபூதி யோகத்தில் “பாண்டவர்களுள் நான் அர்ஜுனன்” என்கிறான் கண்ணன். அந்த உச்சப் பதவியை எனக்கும் கொடுத்து அருள் செய்வாள் என் தாய் என்கிறார் பாரதியார்!

பாரதியாரின் தந்தை!

எனது தந்தை மறக்குல வீரன் என்று மீசை முறுக்குகிறார் பாரதியார்.

பிறந்தது மறக்குலத்தில் – அவன்

பேதமுற வளர்ந்ததும் இடைக் குலத்தில்

எனது தந்தையை மாடுகள் மேய்க்கும் இடைக் குலத்தில் பிறந்தவன் என்பீர்களாயின் அதனை அவனது யதுகுல வரலாற்றுச் சாபமாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்பவர் அடுத்த வரியில்,

சிறந்தது பார்ப்பனருள்ளே!

என நெஞ்சு நிமிர்த்துகிறார்.

வித்தையில் சிறந்தவர்கள் பார்ப்பனர்கள் என்பீர்களேயாயின் அவர்களுக்கும் சேர்த்து கீதையுரைத்தவன் என் தகப்பனே என்று தன் பரம்பரை சுகத்தைச் சொல்லி நெக்கிழைகிறார்.

என் தகப்பன் மிக நல்லவன்தான். ஆனாலும் செல்லம் கொஞ்சி அள்ளிக் கொடுத்துவிடும் தகப்பன் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் என்று கிசுகிசுக்கிறார்.

சில செட்டி மக்களோடு மிகப் பழக்கமுண்டு

எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் முதலில் வறுமையைக் காட்டிப் பின் செழுமையைக் காட்டித்தரும் பொல்லாத தகப்பன் கண்ணன் என்று பிள்ளை மனம் கொண்டு குமைகிறார்.

கண்ண தகப்பன் பாரதிக்குச் சொன்ன ஆகச் சிறந்ததொரு அறிவுரையோடு முடிக்கிறார்...

அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம்

அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்!

கண்ணத் தகப்பன் தலைகோதி புத்தி புகட்ட “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்றதனைத் தன் மனமெங்கும் நிறைத்துக்கொண்டதால்தான் சோற்றுக்கு வைத்திருந்த கையளவு அரிசியையும் வந்தமர்ந்த சிட்டுக் குருவிகளுக்கு வாரியிறைத்தார் எட்டயபுரத்தார்.

பாரதியாரின் குரு!

யமுனா நதி தீரத்தில் மோனத் தவமாடி வரும் ஒரு பொழுதில் கிழவன் ஒருவன் பாரதியின் அருகே வந்து, தோள் தொட்டு

“உன்னை ஆதரிக்க வல்ல குரு மதுராபுரியில் இருக்கிறான் போ” என்றான்.

ஆசை ஆசையாய் மதுராவுக்கு ஓடோடிச் சென்ற பாரதியார் அங்கே ராதையைக் கூடும் காமனாகக் கண்ணனைக் காண்கிறார்.

ஆடலும் பாடலுமாக இருக்கும் ஒரு லோலனைப் போய் குருவாகக் கொள் எனச் சொன்னாயே அடேய் கிழவா என அந்த யமுனா நதி தீரத்தானைத் தேடிக் கொல்லப் புறப்பட்டே விட்டார் பாரதியார்.

அந்த நேரம் அசரீரி ஒன்றைக் கேட்கிறார்...

சித்தத்திலே சிவம் நாடுவார் - இங்கு

சேர்ந்து களித்துல காளுவார் – நல்ல

மத்த மதவெங்களிறு போல் – நடை

வாய்ந்திறு மாந்து திரிகுவார்.

சிவம் என்னும் அன்பை சித்தத்தில் நிறுத்தி மதுராபுரி சன்னதியில் நின்று பார். பிறகு நீ நடக்கும் நடையெல்லாம் யானை நடை போலாகும்!

விலங்குகளில் யானை நடைக்கு என்றொரு சிறப்பு இயல்பு உண்டு. அது, எப்போதும் ஒருபக்கக் கால்களை ஒன்று போலவே எடுத்து வைத்து நடக்கும்.

போலவே, இப்பிறவியில் கொண்ட உன் அறிவையும் ஊழ்வினைப்பட்ட உன் மனதையும் ஒருபோல உணர்ந்து எடுத்து வைக்கப் பழகு.

அறிவும் மனமும் ஒன்றிணைந்து நகரும் அதுபோதில் உன்னுள் ஞானோபதேசம் ஒலிக்கக் கேட்பாய். பேரானந்தம் பெருகக் காண்பாய் .

இந்தச் சின்னஞ்சிறு உலகில் இறுமாந்து திரியும் சுகத்தை அப்போது அடைவாய்.

யானை நடையின் சூட்சுமம் அப்போது விளங்கும்.

சரணாகதிதான் அதன் அங்குசம்!

பாரதியாரின் குலதெய்வம்!

கண்ணனை மாதாவாக, பிதாவாக, குருவாகவும் அறிந்த பாரதியார், வரிசையின் கடைசியாகத் தன் தெய்வத்தைக் காண முண்டுகிறார்.

“எங்கே எங்கே என் தெய்வம்...” எனத் தன் முதுகெலும்பெங்கும் ஏறி இறங்கித் தேடுகிறார்.

அங்கும்கூடக் கண்ண பெருமானையே காண்கிறார்.

“கண்ணம்மா, நீயே என் குலதெய்வம்” என்று ஆனந்தமாகக் கதறுகிறார்.

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென முறையிட்டபடியே ஓடோடி வந்து “நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா” என சாஷ்டாங்கமாக வீழ்ந்து சரணடைந்து புரள்கிறார்.

அந்தப் பாடலுக்கு அவர் தேர்ந்தெடுத்த ராகம் புன்னக வராளி.

புன்னக வராளி என்பது நாகத்துக்கு உண்டான ராகம்.

நாகம் என்று பாரதியார் அடையாளப்படுத்துவது குண்டலினியை என்று புரிந்துகொள்ள வேண்டும்.

குண்டலினி என்பது யோகத்தின் மூலம் – உச்சம்.

யோக சாஸ்திரத்தின் உச்ச தேவதையான குண்டலினியைக் கண்ணபெருமான் வடிவில் குலதெய்வமாகக் கண்டுகொண்டு சரணாகதியாகி நிறைந்து மறைந்தார் பாரதியார் என்னும் அந்த அகண்டப் பேரறிவாளர்.

பாரதியை மறப்போமோ?

இந்த நாட்டின் பெருங்கவியாக தாகூர் போற்றப்படுகிறார். நாமும் போற்றுவோம்.

ஆனால், அவருக்கு ஈடான, சொல்லப் போனால் அவருக்கும் மேலான படைப்பாற்றல் கொண்ட பாரதியாரை இந்த மண் மிக மோசமாக விட்டுக்கொடுத்துவிட்டதே...

தாகூர் அவர்களோ லண்டன் சர்வகலா சாலையில் பயின்ற பெரும் பணக்காரர். பாரதியாரோ ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்ந்த ஏழை என்பதுதான் காரணமோ?

தாகூரும் பிராமணரே. வங்காள மண்ணின் மைந்தர்கள் சாதி மாச்சரியம் பார்க்காமல் அவரை உயர்த்திப் பிடித்தார்கள். கூடவே, பொருளாதார வசதியும் சேர அன்று அந்த நேருவின் கண்ணில் அவர் பட்டுவிட்டார்.

அன்றைய தமிழ்நாட்டு மேட்டுக்குடிகள் எல்லோரும் வட நாட்டு அரசியலாளர்களிடம் வலிந்தோடிச் சென்று “ஐயன்மீர் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். நீங்கள் தங்குவதற்கு எங்கள் பங்களாவைக்கூட எடுத்துக் கொள்ளுங்கள்...” என்று பல்லிளித்துக் கம்பளம் விரித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால், இங்கே தேச விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருந்த பாரதியாரின் ஒருவேளை கஞ்சிக்குக்கூட வழி செய்து கொடுக்க மனமில்லாமல் ஜிம்கானா கிளப்பில் உணர்வின்றிக் கிடந்தனர்.

கடந்த காலத்தைத் தூற்றிப் பலனில்லை. இனியேனும் பாரதியாரை அறிவோம். இன்றைய இலக்கிய ஆர்வலர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.

தயவுசெய்து பாரதியின் குயில் பாட்டு என்னும் அற்புதக் காவியத்தைப் படித்துப் பாருங்கள்.

குயில் பாட்டை எனது 19ஆம் வயதிலேயே ஓரளவு மனப்பாடம் செய்தவன் என்னும் முறையில் சொல்கிறேன்... மேல்நாட்டுக் காவியங்களில் காணக் கிடைக்காத ஏகாந்தச் சரக்கெல்லாம் அதில் கொட்டிக் கிடக்கின்றன.

காலப்போக்கில் பற்பல மேற்குலக இலக்கியங்களை என்னளவில் படித்து வியந்திருக்கிறேன். ஆனாலும், கடந்த நூற்றாண்டில் படைக்கப்பட்ட பாஞ்சாலி சபதத்துக்கு ஈடானதோர் காவியத்தை இன்னமும் நான் காணவில்லை.

காரணம், இந்த மண்ணிற்கே உண்டான அதன் ருசி.

பாரதியாரின் படைப்பில் தமிழ் வளத்தைக் கடந்து சமூகவியல் உள்ளது. அறிவியல் உள்ளது. தாய்மண் பற்றும் தேசியமும் உள்ளது. வாழ்வியல் குறித்த பெருஞ்செய்தி உள்ளது. அண்ட சராசரம் குறித்த விஞ்ஞானம் உள்ளது. மேலும், இந்த மண்ணுக்கே உரித்தான தத்துவ ஞான விசாரம் கொட்டிக் கிடக்கிறது.

உள்ளார்ந்து படிக்கப்படிக்க இன்னும் பலவும் இருக்கக் கூடும்.

கொண்டு கொண்டாடிப் பாருங்கள் பாரதியை. அவரது சந்தம் சிந்தையில் ஏறினால் சுந்தரமாகும் வாழ்க்கை.

வாழிய பாரதி!

ஓங்குக பாரதியின் தமிழ்த் தேசிய தாகம்!

----------------------------------------------------------------------------------------------

கட்டுரையாளர் ஸ்ரீராம் சர்மா எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதனைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திருஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். ஸ்ரீராம் சர்மா.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon