மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்: பரியேறும் பெருமாள்

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல்: பரியேறும் பெருமாள்

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது கதிர், ஆனந்தி நடித்துள்ள பரியேறும் பெருமாள்.

அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்றுள்ள நான் யார் பாடலின் லிரிக்கல் வீடியோ இணையத்தில் நேற்று (செப்டம்பர் 10) வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த வீடியோவில் நடிகர், நடிகைகளின் காட்சிகளோ, புகைப்படங்களோ இடம்பெறவில்லை. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் இயக்குநர் மாரி செல்வராஜும் பாடலைப் பாடுவதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அடக்குமுறைக்கு உள்ளாகும் மக்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதில் மாட்டுக்கறி கொண்டு சென்றதற்காக இளைஞர்கள் தாக்கப்பட்ட காட்சியும், ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவல் துறையினர் நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு முதியவரை அடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.

பாடல் வரிகள் இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சாதிக்கொடுமைகளை நினைவுபடுத்தும் விதமாகவும் கேள்விகேட்கும் விதமாகவும் அமைந்துள்ளன.

“ரயில் தேடி வந்து கொல்லும் நான் யார்?

பூக்கும் மரம் எங்கும் தூக்கில் தொங்கும் நான் யார்?

நதியில் செத்து மீனாய் மிதக்கும் நான் யார்?

குடிசைக்குள் கதறி எரிந்த நான் யார்?

தேர் ஏறாத சாமி இங்கு நான் யார்?

உன் கை படாமல் தண்ணீர் குடிக்கும் நான் யார்?

ஊர் சுவர் கட்டி தூரம் வைக்க நான் யார்?”

என்ற வரிகளை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். பா.இரஞ்சித் தனது நீலம் புரொடக்‌ஷன் மூலம் தயாரித்துள்ளார். ஏற்கெனவே படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

நான் யார் - லிரிக்கல் வீடியோ

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon