மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 14 ஆக 2020

எதிர்க்கட்சி நிறுவனங்களுக்கு பந்த் இல்லை!

எதிர்க்கட்சி நிறுவனங்களுக்கு பந்த் இல்லை!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று இந்திய அளவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. முழு அடைப்பு போராட்டம் வெற்றி என காங்கிரஸ் அறிவித்துள்ளது. வடமாநிலங்களில் போராட்டம் ஓரளவு வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் முழு அடைப்பு முழுமை பெறவில்லை என்றே கூறலாம். பந்த் நடத்திய காங்கிரஸ் மற்றும் ஆதரவு தெரிவித்த திமுக பிரமுகர்களின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன என்பதுதான் பந்த்தின் ஹைலைட் என்கிறார்கள் உளவுத் துறை அதிகாரிகள்.

செப்டம்பர் 10ஆம் தேதி பந்த் என்று அறிவித்ததும் மாநில உளவுத் துறையினர் எதிர்க்கட்சியினர் குறிப்பாக திமுக, காங்கிரஸ் பிரமுகர்களுக்குச் சொந்தமான பள்ளி கல்லூரிகளில், பந்த்துக்கு கல்லூரி விடுமுறையா என்று விசாரித்தார்கள். அதற்குப் பதில் அளித்த பள்ளி, கல்லூரி பொறுப்பாளர்கள் அரசியல் வேறு; தொழில் வேறு சார், அதனால் பள்ளி, கல்லூரி நடைபெறும் என்றுள்ளார்கள்.

நேற்று காலை 8.00 மணியிலிருந்து உளவுத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திமுக, காங்கிரஸ், மதிமுக, போன்ற பந்த்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளின் பள்ளி, கல்லூரிகள் திறந்திருப்பதை போட்டோ எடுத்து மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.

குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் திமுக பிரமுகர்களின் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றுள்ளன. காட்டுமன்னார்கோயிலில் காங்கிரஸ் பிரமுகர் மணிரத்தினத்தின் பள்ளி வழக்கமாக நடைபெற்றது, இதையெல்லாம் அறிந்த மக்கள் பந்த்தில் ஆர்வம்காட்டவில்லையாம்.

.

பந்த் பற்றி மூத்த திமுக பிரமுகரிடம் கேட்டோம், “திமுக பந்த் என்றாலே தமிழகமே கப்சிப் என்று சத்தமில்லாமல் ஆகிவிடும். ஒரு காலத்தில் அந்த அளவுக்குக் கட்சியில் இளைஞர்கள் நிறைந்துபோயிருந்தார்கள். உணர்வுபூர்வமாக, வழக்குகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

இப்போது ஹோட்டல், பள்ளி, கல்லூரி, பேருந்து அனைத்துத் தொழிலிலும் திமுகவினர்தானே அதிகமாகவிருக்கிறார்கள். அதனால் கட்சியை இரண்டாவதுபட்சமாகத்தான் பார்ப்பார்கள்.

காங்கிரஸ்காரர்களை பற்றிச் சொல்லத் தேவையில்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆதரவோடுதான் சவாரி செய்வார்கள்” என்றார்.

தமிழகத்தில் நேற்று நடைபெற்றதை முழு அளவிலான பந்த் என்று சொல்ல முடியாது. புதுச்சேரியில் நடைபெற்ற பந்த்தான் 100 சதவிகிதம் வெற்றி. காரணம், தனியார் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, அரசு பேருந்து, தனியார் பேருந்து மற்ற லாரிகள் முழுமையாக இயங்காமல் கட்டுபாடுடன் பந்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon