மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

ஃபேர்வெல்லுக்குத் தயாராகும் குக்

ஃபேர்வெல்லுக்குத் தயாராகும் குக்

ஓய்வு பெறப்போகும் வீரரின் கடைசி டெஸ்ட் போட்டி அவரது வாழ்நாளின் சிறந்த பொக்கிஷமாகும். அந்த வகையில் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்த அலெஸ்டர் குக், போட்டியின் வெற்றியைக் கடந்து பல்வேறு நினைவுகளைக்கொண்டு தன் எதிர்காலப் பயணத்தைத் தொடங்கவிருக்கிறார்.

பொதுவாக எந்த ஒரு வீரருக்கும் தன் கடைசி போட்டியில் சதத்துடன் விடைபெற வேண்டும் என்பதே கனவாக இருக்கும். அலெஸ்டர் குக், தனது கடைசி போட்டி என அறிவித்த ஐந்தாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் 50 ரன்களைக் கடக்கும் வரை நிதானத்தைக் கடைப்பிடித்தார். 50ஐ கடந்த உடன் அதனை சதமாக மாற்ற இன்னும் பொறுமை காட்டினார். 96 ரன்கள் எடுத்து ஆடிக்கொண்டிருக்கையில், ஓவர் த்ரோவின் வாயிலாக 5 ரன்களை போனஸாகப் பெற்று கடைசிப் போட்டியில் சதமடிக்கும் கனவை நனவாக்கினார்.

அறிமுகப் போட்டியில் சதத்துடன் தன் டெஸ்ட் பயணத்தை தொடங்கிய குக், பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் நேற்று மீண்டும் ஓர் அருமையான சதத்துடன் நிறைவு செய்திருக்கிறார். கிரிக்கெட் வரலாற்றில் இப்படி சதத்தில் தொடங்கி சதத்தில் முடித்தவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து மட்டுமே. முதல் போட்டியிலும், கடைசி போட்டியிலும் ஒரு அரை சதம், ஒரு சதம் அடித்தவர்களின் வரிசையில் இவரே முதலிடத்திலும் உள்ளார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவரது முதல் போட்டியும் கடைசி போட்டியும் இந்தியாவுக்கு எதிராக ஆடப்பட்டவை.

1909 ஆண்டு இங்கிலாந்து அணிக்கு ஐசிசியின் முழு உறுப்பினராக அந்தஸ்து கிடைத்தது. அன்று தொடங்கி இன்று வரை இந்த 109 ஆண்டுகால வரலாற்றில் அலெஸ்டர் குக்கைப் போன்ற ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரரை அந்த அணி கண்டதில்லை என்றே கூற வேண்டும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அலெஸ்டர் குக் இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்றவர், அதிக ரன்களைக் கடந்தவர், அதிக போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர், அதிக சதங்கள் அடுத்தவர்... இப்படி பல்வேறு சாதனைகளை அவர்வசம் வைத்துள்ளார்.

குக் இந்த தொடரில் இதுவரை ஏழு இன்னிங்ஸில் விளையாடி, முறையே 13, 0, 21, 29, 17, 17, 12 என்ற சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து, மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார். ஓய்வை அறிவித்த பின் அவரது கடைசி டெஸ்டான இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 71 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 147 ரன்களும் எடுத்துள்ளார். ஒருவேளை இந்த இன்னிங்ஸில் ஆடியது போல கடந்த நான்கு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் ஆடியிருந்தால் இந்த ஓய்வு முடிவு இன்னும் ஒருசில காலம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கலாம்.

தவறான தருணத்தில் குக் தனது ஓய்வை அறிவித்துவிட்டார் என சில கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வந்தாலும், பலர் இவரது இந்த முடிவு சரியானதே என்று வரவேற்கின்றனர். அவரது திறன் குறைந்து விட்டது என்ற காரணத்தால் அல்ல. ஃபார்ம் ஒருபுறம் இருந்தாலும், அவரது உடல்தகுதியைக் கொண்டு இன்னும் ஓரிரு ஆண்டுகள் இங்கிலாந்து அணியில் அவரால் தாக்குப் பிடித்திருக்க முடியும். ஆனால், குக் அவரால் முடிந்த அனைத்தையும் இங்கிலாந்து கிரிக்கெட்டுக்காக அர்ப்பணித்துவிட்டதாகக் கருதி, எதிர்கால வீரர்களுக்கு வழிவிடும் நோக்கில் கூட இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

பெரும்பாலும் ஓய்வுபெறும் வீரர் பேட்ஸ்மேனாக இருந்தாலும்கூட கடைசி போட்டியில் ஒரு ஓவர் பந்துவீச அழைக்கப்படுவர். நேற்று அந்த தருணத்திற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நாளான இன்று குக் ஒரு ஓவராவது பந்துவீச அழைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று இந்திய அணியின் பேட்டிங்கின்போது குக் முதல் ஸ்லிப்பில் ஃபீல்டு செய்து கொண்டிருந்தார். பெரும்பாலும் அந்த இடத்திற்கு துடிப்பான இளம் வீரரைத்தான் தேர்வு செய்வார்கள். 161ஆவது டெஸ்ட்டில் கூட குக், துடிப்புடன் ஆடுவதற்கு இதுவும் ஒரு சிறந்த உதாரணம்.

எது எப்படியோ... சுவாரஸ்யமான பல நினைவுகளைக் கொண்ட இங்கிலாந்தின் தலைசிறந்த வீரரின் சகாப்தம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றியுடன் இவரை வழியனுப்ப இங்கிலாந்து வீரர்கள் தயாராக உள்ளனர். இந்திய அணியின் முன்னணி விக்கெட்டுகள் நேற்றே விழுந்துவிட்டதால் இன்று இங்கிலாந்துக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது.

- முத்துப்பாண்டி யோகானந்த்

செவ்வாய், 11 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon