மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 1 ஜுன் 2020

கிங் மேக்கர்: திடீர் முடிவு!

கிங் மேக்கர்: திடீர் முடிவு!

பிரஷாந்த் கிஷோர் யாருக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ, அவரே அடுத்த பிரதமர் என்று வடநாட்டு ஊடகங்கள் வாய்வழிச் செய்திகளை விடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முழுமுதற்காரணமாக பார்க்கப்பட்டவர் பிரஷாந்த் கிஷோர். 2012ஆம் ஆண்டு குஜராத் தேர்தலில் ஆரம்பித்த மோடி - பிரஷாந்த கிஷோர் வெற்றிக் கூட்டணி கடந்த பிகார் தேர்தல் வரை நீடித்தது. இந்தியாவில் முதன்முறையாகத் தேர்தலுக்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து ஆன்லைன் பிரச்சாரப் படையை உருவாக்கி உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர். மோடியை மீட்பராக வர்ணிப்பு செய்தது முதல், எதிர்க்கட்சியின் 'டீ-விற்றவர்' விமர்சனத்தை ஹேஷ்டாக் ட்ரெண்டிங் ஆக்கியது வரை உலக அளவிலான தேர்தல் வியூகங்களை வகுத்தவர். இதன் பிறகு காங்கிரஸ் உட்பட பல்வேறு கட்சிகளும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்குமாறும் தேர்தல் வியூகங்கள் வகுத்துத் தருமாறும் பிரஷாந்த்திடம் வேண்டுகோள் விடுத்தன. மேலும் வரும் டிசம்பரில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (ISB) மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரஷாந்த் கிஷோர், “நான் கடந்த இரண்டு வருடங்களாக இந்த முடிவை எடுக்க வேண்டுமென்றிருந்தேன். ஆனால், உத்தரப் பிரதேசம் தந்த தோல்வி என்னைத் தடுத்து நிறுத்தியது. 2019இல் இந்த பி.கே யாருக்காகவும் பிரச்சாரம் செய்வதை நீங்கள் பார்க்க முடியாது. நான் இந்திய அரசியல் நடவடிக்கை குழு (Indian Political Action Committee - I-PAC) ஒன்றை அமைப்பேன் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை. எனக்கும் பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் எந்த சச்சரவுகளும் இல்லை. நான் பஞ்சாபில் காங்கிரஸுக்காகப் பிரச்சாரம் செய்தது ஆம் ஆத்மிக்கு எதிராக நான் கண்ட தோல்வியைச் சரிசெய்து கொள்வதற்காகத்தான். இது குழந்தைத்தனமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளது தேசிய அரசியல் களங்களில் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon