மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

பெட்ரோல் விலையைக் குறைத்த ஆந்திரா!

பெட்ரோல் விலையைக் குறைத்த ஆந்திரா!

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியைக் குறைப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைத் தினமும் மாற்றியமைக்கும் முறையைக் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மத்திய அரசு கொண்டுவந்தது. அன்றிலிருந்து தற்போது வரை ரூ.16 வரை அவற்றின் விலை அதிகரித்துள்ளது.

விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. எனினும், எரிபொருட்களின் விலையைக் குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில், ஆந்திராவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீதான வாட் வரியில் ரூ.2 குறைக்கப்படும் என்றும் இந்த உத்தரவு இன்று (செப்டம்பர் 11) முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சட்டப்பேரவையில் நேற்று அறிவித்துள்ளார்.

“கடந்த 2013-14ஆம் ஆண்டுகளில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 105.52 டாலராக இருந்தது. ஆனால், அந்த விலை 46 டாலராகக் குறைந்தபோது மத்திய அரசு பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைக் குறைக்கவில்லை. தற்போது கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 70 டாலராக மட்டுமே உள்ள நிலையில், எரிபொருட்களின் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. தற்போது வாட் வரியைக் குறைப்பதன் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,120 கோடி இழப்பு ஏற்படும்” என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை 4 சதவிகிதம் குறைப்பதாக ராஜஸ்தான் அரசும் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon